கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 130).
திரைப்படங்களில் தேன் சிந்தும் தமிழ்ப் பாடல்கள் பல்லாயிரம் எழுதிக் குவித்ததுடன், காப்பியங்கள் பல செய்து கவியரசர் ஆனவர்கள் கண்ணதாசனும், வாலியும்.எதிர் எதிர் துருவங்களாக ஒரே காலத்தில் திரைப்பாடல் உலகைக் கலக்கிய இருவரும், இத்தனை அன்புள்ளவர்களா என்று புதிரை விடுவிக்கும், அற்புதக் கவிதைப் பேழை
"கிருஷ்ண பக்தன்!' அண்மையில் பத்மஸ்ரீ விருது பெற்ற கவிஞர் வாலி, தன் குருவான கண்ணதாசனுக்கு எடுத்துள்ள கவிதாலயம் இந்த நூல்."குங்கும நெற்றியும், குழந்தை நெஞ்சமும், நற்றமிழ் நாக்கும், நல்லருள் வாக்கும் எந்தை ஒருசேர ஏற்றவன்' என்று தனது குருவாகக் கண்ணதாசனை கவி மலர் தூவி வழிபடுகிறார் வாலி. மனம் திறந்து பாடுகிறார் கண்ணதாசன் புகழை. தான் ஏகலைவன் ஆகி கண்ணதாசரை துரோணராக ஆக்கி, அவரிடம் மானசீகமாகக் கற்றதை மனம் திறந்து பாடியுள்ளார் வாலி. கண்ணதாசன் கண்ணன் போல், எட்டாம் பிள்ளை அந்த பிள்ளை தான் எனக் கெல்லாம் சட்டாம்பிள்ளை.பெற்றோர் இட்ட பெயர் முத்தையா - தாய் முழுகாதிருந்து எடுத்த "முத்தையா' என்று கண்ணதாசனின் பல்வேறு சிறப்பையும் வாலி, பூந்தமிழில் பாடி முடித்துள்ளார். எம்.எஸ்.விசுவநாதன் சிலை வைத்த சிறப்பையும் போற்றியுள்ளார். வானம் உள்ளவரை கண்ணதாசனின் கானமும் இருக்கும். சமகாலக் கவிஞனை போற்றும் வாலியின் இந்த காவியம் தமிழ் உள்ளவரை நின்று நிலை பெறும்!