வசந்தா பதிப்பகம், மனை எண்.9, கதவு எண்.26, சோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை-88. (பக்கம்: 136.
அரசு எச்சரிக்கை விளம்பரங்கள் அவ்வப்போது விடுக்கப்பட்டபோதிலும், வருமான வரிக் கணக்கு வழக்குகளை முறைப்படி சமர்ப்பித்து வரி செலுத்துபவர்கள் அல்லது ஏய்ப்பவர்கள், கறுப்புப் பணத்தை உருட்டி, புரட்டிப் பெருக்குபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதையும், இத்தகைய "திடீர் கோடீஸ்வரர்'களின் வீடுகள், உடைமைகள் யாவும் வருமான வரித் துறையினரால் அதிரடி சோதனைகள் (ரெய்டுகள்) மேற் கொள்ளப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு வரும் அவல நிலைகளை எல்லாம் நாளேடுகள், தொலைக்காட்சிகள் வாயிலாக நாம் கண்டு வருகிறோம்.முறையான கணக்குகள், ஆவணங்களின் அடிப்படையில் பட்டயக் கணக்காளரின் (ஆடிட்டர்) ஆலோசனையின் பேரில் கணக்குகளைத் தாக்கல் செய்து வருமானத்திற்கு ஏற்ப வரியை ஆண்டுதோறும் தவறாது செலுத்துபவர்களுக்கு "மடியில் கனமிருந்தாலும் வழியில் பயமில்லை,'
கேள்வி - பதில் மற்றும் கட்டுரைகளின் வடிவில், சான்றுகள், எடுத்துக்காட்டுகள் வாயிலாக, வருமான வரி குறித்த தகவல்களைத் தாங்கியுள்ள இந்நூல், சிறு தொழில் மற்றும் வியாபாரம், வணிகர் சமுதாயம் பயனுறும் விதமாக அமைந்துள்ளது.
ஆயினும் முன்னாள், இந்நாள் நிதி அமைச்சர்களின் வரவு - செலவுத் திட்டங்கள் பற்றிய சர்ச்சை (பக்:61-65), வருமான வரி கட்டினால் வணிகம் வளரும் (பக்.93) மற்றும் ஆந்திர விவசாயிகள் தற்கொலை (பக்:115) இந்தக் கட்டுரைகளில் இடம் பெற்றுள்ள நூலாசிரியரின் சொந்தக் கருத்துக்கள் யாவும் அறவே நீக்கியிருக்க வேண்டும். மாறாக எந்த வரிக்கான படிவத்தை எவரெவர் பயன்படுத்த வேண்டும், எந்தெந்தத் தேதிக்குள் அதைப் பூர்த்தி செய்து எந்தெந்த ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
மேல் முறையீடுகளுக்கான சாத்தியக்கூறுகள், தீர்ப்பாயங்களின் செயல்பாடுகள் போன்ற அதிமுக்கியமான தகவல்கள் இந்த முதல் தொகுப்பிலேயே இடம் பெற்றிருக்க வேண்டும்.
ஆனாலும் வணிகப் பெருமக்களுக்கு வருமான வரிச் சட்டம் பற்றிய விழிப்புணர்ச்சியூட்டும் விதமாக, எளிய தமிழ் நடையில் அறிமுக நூல் ஒன்று வழங்கப்பட்டதற்கு பாராட்டுக்கள்