பாரதி புத்தகாலயம்,421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-600 018. விலை:ரூ.95.
திரைத்துறையில் புதுமையும், எளிமையும், சிறப்பும்மிக்க பாடல்களை இயற்றி 40 ஆண்டுகள் கவியரசராகத் திகழ்ந்தவர் வாத்தியார் என்று கலையுலகத்தாலும், பொது மக்களாலும் போற்றப்பட்டவர் உடுமலை நாராயணகவி. தேசியம், சுயமரியாதை, பொதுவுடைமை என்ற மூன்று நதிகளும் சந்திக்கும் கடலாகத் திகழ்ந்தவர். கவிஞருக்குரிய மிடுக்கும்; அறியப்புலமையும் ஒருசேர வாய்க்கப் பெற்றவர். தன் சமகாலத்தில் திரைப்பாடல் எழுதவந்த மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்றோரை ஊக்குவித்தவர்; அவர்களின் வளர்ச்சிக்கும் உதவியவர்; கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் அரசவைக் கவிஞர். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் நூற்றாண்டையொட்டி உடுமலை நாராயணகவி நாட்டுப்புற விளைச்சல் என்னும் இந்தப் படைப்பினை முன் விளக்கத்துடன் நூலாக வடித்துத் தந்துள்ளார் சங்கை வேலவன். நாட்டுக்குழைத்த நல்லோர்-வல்லோர் படைப்புகளைத் தொகுப்பதையும், சமுதாய மேம்பாட்டுக்குதவும் கலைஞர்களின் பங்களிப்பைப் பதிவு செய்வதையும், மக்கள் இசைமெட்டுகளில் புதுப்புதுப் பாடல்கள் இயற்றுவதையும் தன் கடமையாகக் கொண்டவர். பணம், பட்டம்,பதவி என்று எந்தவிதமான ஆசையுமின்றி மக்கள் பணி ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார். இதுவரை 35 நூல்களை எழுதி உள்ளார்.