Vidya Publi cations, 15, First Main Rd, Ponmeni Jayanagar, Madurai625010. Phone: (0452) 2380042.
ஆங்கில நூல். அதுவும் நவீன வரலாற்றுப் பேராசிரியர் உருவாக்கிய நூல். சமகால வரலாறு, மற்றும் கடந்த 200 ஆண்டுகளில் நடந்த பல சம்பவங்களை தொடர்ச்சியாக அறிந்து கொள்வது சிரமம். வரலாறு என்றாலே ஆர்வம் குறைந்து கணினியில் தகவல் திரட்டும் காலத்தில் உண்மைத் தகவல்களை குவிஸ் பாணியில் தொகுத்த ஆசிரியர் முயற்சிக்கு பாராட்டுதல்கள்.சமூக, பொருளாதார முக்கியத்துவங்கள் வாய்ந்த தகவல்களை இதில் சொல்லியிருப்பதையும், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு மட்டும் அல்ல, வரலாற்று உண்மைகளைத் தெரிந்து கொள்ள உதவும் வகையில் கேள்விகளும், பதிலும் அமைந்திருக்கின்றன. அதற்கு உதவியாக பத்து பக்கங்களில் வரலாற்றின் சுருக்கம் அழகுறத் தரப்பட்டிருக்கிறது.குவிஸ் பாணியில் உருவாக்கப்பட்ட இந்த நூலில் 1200 கேள்விகள், முதல் பாதியில் கேள்விகள், அக் கேள்விகளுடைய எண்களுக்கு ஏற்ப பிற்பகுதியில் பதில்கள், சுருக்கமாக, நயமாக, தெளிவாக தொகுத் தளிக்கப்பட்டிருக்கிறது.அதில் சில தகவல்கள்:அரசியல் தீர்க்க தரிசனத்தை இந்தியருக்கு வழிகாட்டிய பிரிட்டிஷ் நிர்வாகி யார் என்ற கேள்விக்கு பதில் ரிப்பன் (எண்:51), இந்திய தேசிய காங்கிரசில் உரையாற்றிய கோல்கட்டாவின் முதல் பட்டதாரிப் பெண் காதம்பினி கங்குலி (எண்75), "சாதி ஒழிய வேண்டும், அல்லது நாம் ஒழிய வேண்டும் என்று 1883ல் முழங்கிய தேசியவாதி ஜி.சுப்பிரமணிய அய்யர் (எண் 100), "பாலபாரதி' என்ற இலக்கிய இதழை நடத்தியது வ.வெ.சு அய்யர் (எண் 281) வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தைத் தலைமை ஏற்றது யார்? அவர் தலைமையில் சென்ற தொண்டர் எண்ணிக்கை - ராஜாஜி, தொண்டர்கள் நூறுபேர் (எண்.863). இப்படி பல முக்கியத் தகவல்கள் உண்டு. இந்தியா பிரிவு பட்ட நாளன்று, "அது துயர நாள், இந்தியாவின் அழிவுக்குக் காரணம்' என்று மாபெரும் தேசியவாதி ஆசார்ய கிருபளானி கூறிய தகவல், "சுதேசி' என்று எல்லாரும் அடிக்கடி கூறும் வார்த்தைக்கு சரியான அர்த்தம் 1198 ஆம் கேள்விக்கு பதிலாக அமைந்திருக்கிறது.மொத்தத்தில் எது சரியான தகவல் என்றறியாமல் குழம்பும் நிலையை மாற்றிடவும், வரலாற்றின் சில நயமான பகுதிகளை ஆசிரியர் இந்த நூலில் தொகுத் தளித்த விதமும் பாராட்டுதற்குரியது. பள்ளிகள், கல்லூரிகளில் இருக்க வேண்டிய நூல். பொது அறிவு என்ற பெயரில் பல தகவல்களைத் தவறாகத் தரும் காலத்தில் நயமாக முகிழ்த்த நறுமலர்.