முகப்பு » இலக்கியம் » இராமலிங்கக்

இராமலிங்கக் களஞ்சியம் திருவருட்பா சிறப்பகராதி

விலைரூ.400

ஆசிரியர் : புலவர் மணியன்

வெளியீடு: சுத்த சன்மார்க்க நிலையம்

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை
சுத்த சன்மார்க்க நிலையம், நெய்வேலி மெயின் ரோடு, வடலூர்-607 303. (பெரிய பக்கம்: 1175. சலுகை விலை ).

தமிழில் கவிதைகளுக்கு, காப்பியங்களுக்கு என எழுதப்பட்ட சொல்லகராதி மிகக் குறைவு. பக்தி இலக்கியங்களுக்கோ அதனினும் குறைவு. இந்நிலையில் திருவருட் பிரகாச வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்குமான ஒரு தெளிவான சொல்லகராதி வெளிவந்துள்ளது. திருவருட்பாவின் ஆறு திருமுறை - ஆறாயிரம் பாட்டுகளிலும் இடம் பெற்றுள்ள அனைத்துச் சொற்களும் (ஏறத்தாழ ஒரு லட்சம்) இரண்டு பெரிய தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு வெளிவந்துள்ளன.
வள்ளற் பெருமானின் பாடல்களில் வந்துள்ள பெயர், வினை, உரிச் சொற்களை(யும்) தனித் தனியாகப் பிரித்துத் தேவைப்பட்ட இடங்களில் பொருள் எழுதி அகர வரிசைப்படுத்தி, அவை வந்துள்ள பாடல்களின் எண்களையும், சார்ந்த வரி எண்களையும் சுட்டிக் காட்டியுள்ளார் நூலாசிரியர். ஆயிரக்கணக்கான பாடல்களில் அமைந்துள்ள பல்வேறு சொற்களையும் தனித்தனியே திரட்டி அகர நிரல் படுத்திச் சொற்கோவையாகத் தந்துள்ள பணி எளிமையானதன்று; இவ்வரிய பணியை மிகச் செம்மையாக செய்து முடித்துள்ளார் புலவர் மணியன். எடுத்துக்காட்டாக, `சோதி' என்ற ஒரு சொல்லை எடுத்துக் கொண்டால், இது ஏறத்தாழ ஐநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் வந்துள்ள பாங்கைக் காண முடிகிறது.
அடிகளாரின் பாடல்கள் எளிமை வாய்ந்தவை; எனினும் அவர் தம் சொல்லாட்சி சிறப்பையும், சொற்பொருள் ஆழத்தையும், வரலாற்றுக் குறிப்புகளையும் அறிந்து போற்றிடத்தக்கதாகவும், எதிர்காலச் சந்ததியர்க்கு உதவக்கூடியதாகவும் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.நூலின் முடிவில், விடுபட்டவை, அரிய புதிய சொற்கள் எனும் இணைப்புகளும் உள்ளன. `அகமிதம்' என்று ஒரு சொல். இதற்கு அறியாத்தனம் (4574:2) என்று பொருளாம். சிலுகுறும் என்னும் சொல்லுக்கு (பண்பு) சுருங்கிவிடும் என்பது பொருளாம். இவ்வரிய கருவூலம்
1175 பக்கங்களைக் கொண்டுள்ளது. புரவலர் அருட்செல்வர் நா.மகாலிங்கம் பெருங்கொடையால், ஆயிரம் பொன் பெறும் இவ்வருட்பாக் களஞ்சியம் 400 வெண்பொற்காசுகளுக்கு நமக்குக் கிடைக்குமாறு வாய்த்தமை நன்பேறு.
கையில் எடுத்தாலே கனக்கின்ற இந்நூல் உருவாக்கத்திலும், உள்ளடக்கத்திலும் கனமாகவே இருக்கிறது. அறிஞரும் ஆய்வாளரும் அன்றி எவரும் படித்துப் பயன்பெற வேண்டிய சாதனைப் புத்தகம் இது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us