வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 368)
இந்நூலில் 1773-ம் ஆண்டு ஒழுங்கு முறைச் சட்டம் தொடங்கி 1950-ம் ஆண்டு இந்திய அரசமைப்புச் சட்டம் வரையில் கொண்டு வரப் பட்ட சட்டங்கள் பற்றியும், வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற விடுதலைப் போராட்ட
வரலாறும் தொய்வின்றி விளக்கப் பட்டுள்ளன. ஜாலியன் வாலாபாக் படுகொலை, ஒத்துழையாமை இயக்கம், சைமன் குழுவிற்கு எதிரான போராட்டம், வட்ட மேசை மாநாடுகள், ஆகஸ்ட் அறிவிப்பு (1940), இரண்டாம் உலகப்போர், `வெள்ளையனே வெளியேறு' இயக்கம் (1942) போன்ற வரலாற்றுச் செய்திச் சுருக்கங்களும் நேர்த்தியாக கூறப்பட்டுள்ளன. `இந்தியாவிலிருந்து ஆங்கில அரசு அவமானப்பட்டு ஓடி வரும் நிலை ஏற்படும். நாமே இந்தியர்களிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறிவிடுவது, பிரிட்டனுக்குப் பெருமை தருவதாக இருக்கும்' (249) என்ற கிளமண்ட் அட்வி பிரபுவின் யோசனையே சுதந்திரம் பெற வழிவகுத்தது. `என் மீது விழுந்த அடிகள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முடிவு கட்டும் சவப்பெட்டிக்கு அடிக்கப்பட்ட ஆணிகள்' (169) என்று லாலாலஜபதிராய் கூறியது.
`நள்ளிரவில் கிரகங்களின் அமைப்புச் சாதகமாக இருக்கிறது. எனவே, அப்போது சுதந்திரம் பெறுவது நல்ல பலன்களையே ஏற்படுத்தும்' என ஜோதிடர்கள் கூறியதன் பேரில் 1947ம் ஆக., 14ம் தேதி அன்று இரவு 12 மணிக்கு (253) இந்தியா சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது போன்ற பல ருசிகரத் தகவல்களைக் கொண்ட இந்நூல் அரசியல் மற்றும் சட்டம் பயிலும் மாணவர்களுக்குப் பயன்படும். விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்கினை தமிழர்களாகிய நூலாசிரியர்களே பதிவு செய்யாமல் விட்டுவிட்டது பெரும் குறை தான். எனினும் அடுத்த பதிப்பிலாவது பதிவு செய்தால், தமிழனின் தியாகம் தரணிக்கும் புலனாகும்