விரிவாக்கித் திருத்திய புதிய இரண்டாம் பதிப்பு, 2008. க்ரியா பதிப்பகம், சென்னை. (பக்கம்: 1328.)
"கைபேசி'யில் "குறுந்தகவல்' கிடைத்தவுடனே "இணையதள'த்திலிருந்து "மின்னஞ்சல்' மூலமாகப் பதில் அனுப்பிவிட்டேன்.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்வரை இந்த வாக்கியத்தின் பொருள் எவருக்கும் புரிந்திருக்காது. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் முதற்பதிப்பில் கூட (1992) மேற்கண்ட வாக்கியத்தில் ஒற்றை மேற்கோள் குறியீடுகளால் அடைக்கப்பட்டுள்ள சொற்கள் இல்லை. இவை இரண்டாம் பதிப்பில் இடம் பெற்றுள்ள புத்தம் புதிய தமிழ்ச் சொற்களாகும்.
அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டே போகும் அறிவியல் யுகத்திற்கு ஒருவாறு ஈடு கொடுக்கத் தமிழும் முன்னெப்பொழுதுமில்லாத வேகத்தில் வளர்ந்து கொண்டும் மாறிக் கொண்டும் வருகிறது. தற்காலத் தமிழில் புதிய சொற்கள். தோன்றியவண்ணம் உள்ளன. அவை அனைத்தும் நிலைத்திருப்பதில்லை. புதிய சொற்கள் சில ஆண்டுகளிலேயே பழைய சொற்களாகி, அவற்றின் இடத்தை இன்னும் புதிய சொற்கள் பிடித்துக் கொள்கின்றன. "கணிப்பொறி' கணினி ஆகிவிட்டது; "அலைபேசி' கைபேசி ஆகிவிட்டது.
பழைய சொற்களுக்குப் புதிய பொருள் கற்பிக்கப்படுகிறது. "சின்ன வீடு' என்றால் சிறிய வீடு என்று பொருளில்லை! "சின்னத் திரை' என்பது தொலைக்காட்சிப் பெட்டியின் திரையை மட்டுமே குறிக்கிறது.
எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் முதன்முறையாக உயர் வகுப்புகளில் தமிழ் பயிற்று மொழியான போது. ஆங்கிலச் சொற்களுக்குப் பதிலாக பெரும்பாலும் வடமொழிச் சொற்களே பயன்
படுத்தப்பட்டன. உயர்நிலைப்பள்ளியில் நான் படித்த பாடங்களான சரித்திரம், விஞ்ஞானம், பௌதிகம், ரசாயனம் ஆகியவை தற்காலத்தில் முறையே வரலாறு, அறிவியல், இயற்பியல்,வேதியியல் என்ற நல்ல தமிழ்ச் சொற்களால் குறிக்கப்படுகின்றன.
"சுதேசமித்திரன்' காலத்தில் அன்றாடச் செய்திகளை ஆங்கிலக் கலப்பில்லாமல் பாரதியால் கூட எழுத முடியவில்லை. இன்றைய நாளேடுகளில் செய்திகள் பெரும்பாலும் நல்ல தமிழில் தரப்படுகின்றன. அவற்றுக்குத் தேவையான புதிய சொற்களும் அவ்வப்பொழுது படைக்கப்பட்டு வருகின்றன.
இனியும் பழைய நிகண்டுகளைப் பயின்று தற்காலத் தமிழைக் கையாள முடியாது. எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த "தமிழ் லெக்சிகன்' என்ற புகழ்பெற்ற தமிழ்ப் பேரகராதியும் தற்காலத் தமிழுக்கு வழிகாட்டியாகாது. தமிழ் லெக்சிகன் மீண்டும் பதிப்பிக்கப்படாமல் இருப்பதற்கு இதுவுமொரு முக்கிய காரணமாகும்.
இந்தச் சூழலில் தற்காலத் தமிழுக்கென ஒரு புதிய அகராதியின் தேவை காலத்தின் கட்டாயமாகிவிட்டது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் முதற்பதிப்பு இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ததால் அதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது.
முதற்பதிப்பு மிகக் குறுகிய இடைவெளியில் பன்னிரண்டு முறை மீண்டும், மீண்டும் பதிப்பிக்கப் பெற்றுத் தமிழ் அகராதியின் வரலாற்றில் ஒரு புதிய சாதனையைப் படைத்தது. அதுமட்டுமல்லாமல் பதினைந்தே ஆண்டுகளில் விரிவாக்கித் திருத்திய இரண்டாம் பதிப்பு இப்பொழுது வெளியாகி மற்றொரு சாதனையையும் புரிந்துள்ளது.
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் புதிய இரண்டாம் பதிப்பின் அளவும் பரப்பும் உண்மையிலேயே பிரமிப்பூட்டுவனவாக உள்ளன. 75 லட்சம் தமிழ்ச் சொற்களின் பதிவை உள்ளடக்கிய ஒரு பிரமாண்டமான "சொல் வங்கி'யை அடித்தளமாக அமைத்து, அதிலிருந்து 21,000 சொற்கள் தேர்வு செய்யப்பட்டுச் சேர்க்கப்பட்டுள்ளன. இச்சொற்களின் பொருள் 38,000 எடுத்துக்காட்டு வாக்கியங்களின் மூலமாகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை பெர