நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 504.)
பொது உடைமைச் சித்தாந்தவாதியான தொ.மு.சி.,யின் இந்தப் புத்தகம் பாரதியாரின் வாழ்க்கை, எழுத்துப்பணி, சமுதாய நோக்கு பற்றி விரிவாக விளக்கமளிக்கும் வகையில் எழுதப்பட்ட புத்தகம். பாரதி எழுதியவை, பாரதி பற்றி எழுதி வெளிவந்தவை, அவர் வாழ்ந்த காலம், அந்தக் காலத்தில் நிலவிய அரசியல், சமுதாய, கலாசாரப் பின்னணி ஆகியனவற்றை நன்கு ஆராய்ந்து இந்த நூலை எழுதியிருக்கிறார் அமரர் தொ.மு.சி.,
இலக்கியச் சிந்தனை, சாகித்ய அகடமி போன்ற உயரிய இலக்கிய அமைப்புக்களின் பரிசுகளைப் பெற்ற புத்தகம் இது. பாரதியார், தனது குருநாதராகக் குறிப்பிட்ட சகோதரி நிவேதிதாவைப் பற்றிய தகவல்கள் இந்த ஆய்வு நூலில் அதிகம் உள்ளன.
பாரதியாரின் புதுவை வாழ்க்கை, பத்திரிகைத் துறை அனுபவமும் விரிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். இதேபோல், வீரன் வாஞ்சிநாதன், ஆஷ் துரையை மணியாச்சி சந்திப்பில் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பான விவரங்களை சிரமப்பட்டுச் சேகரித்துள்ளார் தொ.மு.சி.ரகுநாதன். புத்தகம் முழுவதும் பாரதியாரின் துணிச்சலான, துடிப்பு நிறைந்த வாழ்க்கையை நன்கு பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.