பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 576.)
சக்தி வழிபாடு மிகத் தொன்மையானது. அதன் அரும்பெரும் சிறப்புகளை, தத்துவ நுட்பங்களை வேதங்கள் மற்றும் சங்க இலக்கியங்களின் ஆதாரத்துடன் அழகுற எளிய தமிழில் எடுத்தியம்பும் ஞான நூல் இது. சிவனும் சக்தியும் ஒன்றே என்னும் சிவ சக்தி தத்துவம், அம்பிகையின் தலை அலங்காரம், திருக்கரங்களின் அபிநயங்கள், முத்திரைகள், ஆயுதங்கள், அம்பிகையின் அழகு வடிவங்கள், சக்தி பீடங்கள், ஷ்ரீ சக்ர மகிமை போன்ற 14 இயல்களில் விரிவான ஆய்வுக் கருத்துக்களை வெளியிடுகிறார். சக்தி குடி கொண்ட 61 திருத்தலங்களின் மகிமை பேசப்படுகிறது. ராமபிரான் செய்த துர்க்கை பூஜை, கண்ணபிரான் செய்த காத்யாயனி பூஜை, குமரகுருபரர் அம்பிகையின் அம்சமான கலைமகளைத் துதி செய்து, இந்தி மொழியில் பாண்டித்யம் பெற்று வடமாநிலத்தில் சாதனை புரிந்தது, ராமகிருஷ்ணர் பெற்ற காளி அருள் போன்ற செய்திகள் சக்தி வழிபாட்டின் தொன்மைச் சிறப்பை உணர்த்துகின்றன. ஏராளமான நூல்களின் ஆதாரங்களுடன் அரும்பாடுபட்டு ஆழ்ந்த பக்தி மேம்பாட்டுடன் நூலை உருவாக்கியுள்ளார். அம்பிகையின் அழகிய ஓவியங்கள் பலவும் அனுஷ்டா முத்திரைகளின் விளக்கப் படங்களும், தேவகி முத்தையாவின் ஆழமான அணிந்துரையும் நூலின் சிறப்பை உயர்த்துகின்றன. அன்னை பராசக்தியின் அருளை வேண்டுவோர் அவசியம் படிக்கவும், பாதுகாக்கவும் வேண்டிய ஆன்மிகப் பொக்கிஷம் இந்நூல்.