கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, சென்னை -600 017. (பக்கம்: 160)
"இது சாதாரணக் குழந்தை இல்லை... தெய்வாம்சம் பொருந் திய குழந்தை. ஏழு தலைமுறைக்கு நம்ம குடும்பத்திற்கு பேரும் புகழும் வாங்கித் தரப் போற குழந்தை இது. இவன் உடம்பில் ஓடறது ரத்தம் இல்லே... சங்கீதம்! இப்படி உலகம் முழுக்கப் புகழோடும் பேரோடும் வாழப் போற ஒரு குழந்தையைப் பெற்றுத் தரத்தான் நான் பிறந்தேன்' (பக்:57) என்று தன் தாயாராலும், "ஐந்து வயதில் ராகத்தைக் கண்டுபிடிக்கும் ஞானமும், தாள லயமும், ஏழு வயதில் கச்சேரி செய்யும் அளவுக்கு வித்வமும் பாலமுரளிக்கு வாய்த்துவிட்டன' (பக்:19) என்று குருவாலும் புகழப்பட்ட கருவிலே திருவுடைய இசைமேதையின் வாழ்க்கை வரலாற்றை தனக்கே உரிய "தங்க ரத' நடையில், வெற்றியுலா வரச் செய்துள்ளார் ராணி மைந்தன். ஜூலை., 6, 1930ல் பிறந்து, இசை பயின்று, முதன் முதலாக 72 மேளகர்த்தாக்களில் முதல் ராகமான கனகாங்கி ராகத்தில் கீர்த்தனையைத் தொடங்கி புதுப்புது கீர்த்தனைகளைப் பாடி, இசைக்கல்லூரியின் முதல்வராகி, சென்னைக்கு வந்து இசைமேதையாகி, சரஸ்வதி கடாட்சத்துடன் இசையுலகின் உயரிய விருதுகள் அனைத்தும் பெற்று இன்று அமெரிக்காவிலும் பாராட்டைப் பெற்று விளங்கும் சங்கீத சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி பால முரளி கிருஷ்ணாவின் இவ்வரலாற்று நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களும், அமைப்பும் நூலுக்கு மெருகூட்டுகின்றன. பாலமுரளியின் சங்கீதத்தைப் போலவே இந்நூலும் மனநிறைவை அளிக்கக்கூடிய சுவைமிக்கது.