நடனாலயா பப்ளிகேஷன், 17, எட்வர்ட் தெரு ஸ்டிராத் பீல்டு சவுத், ஆஸ்திரேலியா. (பக்கம்: 182.)
"தமிழ் மொழியையும், அதன் பண்பையும், பாராட்டத்தக்க அதன் கலாசாரத்தையும் அதிகம் மதித்து, அதைப் போற்றிப் பாதுகாப்பவர் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள்' என்னும் கசப்பான உண்மைக்குச் சான்றானவர், இந்த நூலின் ஆசிரியர்! இலங்கையில் பிறந்து, வளர்ந்து, தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய கந்தையா அவர்கள் ஓய்வுக்குப் பின் ஆஸ்திரேலியா சென்று அருந்தமிழில் நூல்கள் எழுதி வருகிறார்.நான்கு இயல்களில் 49 தலைப்புகளில் அருமையான "ஆஸ்திரேலியா' நாட்டையே நம் கண் எதிரில் கொண்டு வந்து நிறுத்தி விட்டார். இங்கு 20 இந்துக் கோவில்களும், 31 தமிழ்ப் பள்ளிகளும் 24,067 தமிழர்களும் இருப்பதாகப் புள்ளி விவரங்கள் பலவற்றை அள்ளித் தெளித்துள்ளார்.பரதநாட்டியம், கர்நாடக இசைக்கு அவர்கள் தரும் மதிப்பு மிகப் பெரியதாக உள்ளது. இடை இடையே வண்ணமிகு படங்கள், வார்த்தைகளுக்கு உயிர் தருகின்றன. நம்மை அங்கேயே அழைத்துச் சென்று விடுகின்றன. விசா இல்லாமல் காசில்லாமல் ஆஸ்திரேலியாவைக் கண்டு ஆனந்தம் பெற வைக்கும் நூல்.