கிழக்கு பதிப்பகம், 33/15, 2வது தளம், எல்டாம்ஸ் ரோடு, தேனாம்பேட்டை, சென்னை-600 018. (பக்கம்: 144).
"பாடுவது என்பது ஒன்று. பாடும்போது தன்னையே மறந்து கடவுளிடம் கரைந்து விடுவது என்பது வேறு. சுப்புலட்சுமி இதில் இரண்டாம் ரகம்' என்று காந்தியாலும் (49), "இந்த இசை அரசிக்கு முன்னால் நான் ஒரு சாதாரண பிரதம மந்திரி தானே' என்று நேருவாலும் (பக்.67), "சுப்புலட்சுமி, பிருந்தாவனத்து துளசி மாதிரி' என்று காஞ்சிப் பெரியவராலும் (89) பரிபூரண ஆசி பெற்ற சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை சுவையான சம்பவங்களுடன் சுவராஸ்யமாகப் படைத்துள்ளார் வீயெஸ்வி.தொழு நோயால் சுப்ரமணிய சிவா பாதிக்கப்பட்டபோது அவருக்கு ஆறு மாத சேவகம் செய்த துணிச்சல் மிக்க தன் கணவர் சதாசிவம் பற்றி, "எனக்கு எதுவுமே தெரியாது. உங்களை மாதிரி நானும் ஒரு குழந்தையாத் தான் இன்னமும் இருக்கேன். நான் எங்கே போகணும், என்ன பண்ணனும்னு என்னுடைய ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பார்த்துக்கிட்டது மாமா தான். பாடறப்போ லயிச்சுப் பாடணும்னா அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிஞ்சு பாடணும்னு எனக்குச் சொல்லித் தந்ததும் கூட அவர் தான்...' (39)."மீரா' புகழ் நடிகையான இவர் தான் இந்தியாவின் முதல் பத்மபூஷண் பெற்ற பெண்மணி, மியூசிக் அகடமியில் முதல் கச்சேரி செய்த பெண்மணி, ஐ.நா., சபையில் ஒலித்த கவிக்குயில். கணவனே கண்கண்ட தெய்வமாக வாழ்ந்த இந்த இசையரசி பற்றிய நூலின் இறுதியில், "சிம்மம் அடங்கிவிட்டது. அதைத் தொடர்ந்து குயிலும் கூட்டுக்குள் ஒடுங்கிவிட்டது' (131) என்னும் வரிகள் நம்மையும் அறியாமல் நம் கண்களைக் கலங்கச் செய்துவிடும். இசை மீது எம்.எஸ்.,க்கு எவ்வளவு பக்தியோ அந்த அளவு எம்.எஸ்., மீது தமக்கு பக்தி உள்ளது என்பதை வீயெஸ்வி இந்நூல் வாயிலாக உணர்த்தியுள்ளார். நேர்த்தியான நடை, நிறைவான படைப்பு.