சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், த.பெ.எண்.2, வடலூர்-607 303. கடலூர் மாவட்டம். (பக்கம்: 720).
அருட்பெருஞ்ஜோதியான வள்ளலாரின் வரலாற்றை, சன்மார்க்க தேசிகன் ஊரன் அடிகள் எழுதி, தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கியிருக்கிறார். அடிகளார், தம்மை முழுவதுமாக சன்மார்க்க நெறிக்கும், அதன் அருமை பெருமைகளை உலகிற்கு உணர்த்தவும் ஈடுபடுத்திக் கொண்டவர். வள்ளலார் சுவாமிகளைப் பற்றி இவரைத் தவிர வேறு யாரால் மற்றவர்கள் புரிந்து கொள்ளத்தக்க வகையில் எடுத்துச் சொல்ல முடியும்? இந்த நூல் எழுத முன்மாதிரியாக அவர் எடுத்துக் கொண்ட நூல் பட்டியலில், தமிழ்த் தாத்தா உ.வே.சா.,வும், யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரும் என்று கூறியிருக்கிறார். இந்த இரு பெரும் அறிஞர்கள் தமிழுலகம் நன்கறிந்த மேதைகள்.இராமலிங்க அடிகள் எளிய குடும்பத்தில் பிறந்த உயர்ந்த ஆன்மிகவாதி. தெளிந்த சிந்தனை வழிப் பிறந்த தூய்மையான ஆன்மிகக் கருத்துக்கள், "தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்' என்ற பாரதியின் ஆவேசமும், "இடும்பை கூர் என் வயிறே' என்ற அவ்வையின் எதிர்மறை ஓலமும் வள்ளல் இராமலிங்க அடிகளாரை எப்படி சிந்திக்க வைத்திருக்கும் என்பதற்கு "அணையாத அடுப்பு' என்ற இரு சொற்களே போதுமல்லவா?திருவள்ளுவரின் "கொல்லாமை' அதிகாரமும், சமண மதத்தின் ஒரு உயிருக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற தத்துவமும், வள்ளல் பெருமானிடம் ஜீவகாருண்யமாக மலர்ந்து ஒளிர்வதை, அடிகளார் நமக்குத் தெளிவாகச் சொல்கிறார். சன்மார்க்கங்கள் உலகெங்கும் பல உண்டு. ஆனால், சமரச சன்மார்க்கம் என்றால் அந்த வடலூரில் மட்டும் தான் உள்ளது.வள்ளலார் ஞானியா, யோகியா, சித்தரா, முனிவரா ஆன்மிகம் பேசும் பவுராணிகரா, கவிஞரா, சமூகப் பிரக்ஞை உள்ள ஆன்மிகச் சீர்திருத்தவாதியா எனப் பலவாறாக நம்மை சிந்திக்கத் தூண்டும் இந்த வரலாற்றுப் பதிவுகளை வாசிக்கிறோம். வரலாறு என்றால் தோற்றம் முதல் முக்தி வரை சொல்ல வேண்டுமல்லவா? வள்ளல் பெருமானாரின் "முக்தி' என்பது ஜோதியுடன் கலந்து கரைந்து போய்விடுவதாக முடிகிறது. இந்தத் தகவலை ஆதாரப்பூர்வமாக, அதிகாரப்பூர்வமாக அடிகளார் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார்.வள்ளல் பெருமானாரின் குடும்பம், ராமகிருஷ்ண பரமஹம்சரின் இல்லறத்தை நினைவுபடுத்தும் இல்லற - துறவறம், அவர் சென்று வணங்கிய இறைத் தலங்கள், ஆழ்ந்த சிந்தனைகளின் பலனாக அவருள் நிகழும் வியக்கத்தகு தெய்வ நம்பிக்கைகள், ஏற்றுக் கொண்ட பணியை தொய்வின்றி தொடர்ந்து செய்ய அவர் எதிர்கொண்ட சிரமங்கள்... என வரலாறு கங்கை நதியென பொங்கிப் பிரவாகமெடுத்துச் செல்கிறது.இந்த மூன்றாம் பதிப்பு, 30 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வெளிவந்திருக்கிறது. அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கத்துக்கு இந்த நூலை அர்ப்பணம் செய்திருக்கிறார் அடிகள்.ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணியை ஊரன் அடிகள் செய்து முடித்திருக்கிறார். தமிழுக்கு கிடைத்த அரிய வழிகாட்டி நூல்.