திருப்பூர் மக்கள் மன்றம், மங்கலம் சாலை, திருப்பூர்-641 604. (பக்கம்: 408)
திருப்பூர் எழுத்தறிவாலயம் வழியாக டாக்டர் அரிமா.சி.சுப்பிரமணியனாரால் தொகுப்பட்ட ஒரு அற்புதமான நூல். தமிழகத்தின் தலை சிறந்த தொழில் வளம் நிறைந்த நகரங்களில் ஒன்று திருப்பூர். திருப்பூர் என்று உச்சரித்தாலே நமக்கெல்லாம் கொடி காத்த குமரன் தான் நமது நினைவலைகளில் நிழலாய் இருப்பார். இருந்தாலும் இந்நூலைப் படித்துணர்ந்த பிறகு திருப்பூரின் சாதனையாளர்கள் பட்டியல் வாசகனை வியக்க வைக்கும். திருப்பூர் தியாகிகள் (50) விடுதலை வேள்வியில் பங்கு பெற்றோர் (34) இன்றைக்கும் வாழும் வரலாறாக நிற்கின்ற பெருமக்கள் (9) கல்விக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்ட பெருந்தகையாளர்கள்(6) அரசியல் அரங்கில் பங்கு பெற்று அப்பழுக்கற்ற நேர்மையையும் சத்தியத்தையும் கடைப்பிடித்து மக்கள் தொண்டே மகேஸ்வரன் பணி என பணியாற்றிய அரசியல்வாதிகள் (17) பொதுத் துறையிலே சாதனை செய்து திருப்பூர் நகரை வளம் கொழிக்கச் செய்த நல்லுள்ளங்கள் (4) திருப்பூரை அடுத்த தொழில் ஊரான வெள்ளை கோவிலில் உள்ள சாதனையாளர்கள் (7) என மிக மிக அற்புதமாக சுருக்கமாக மொத்த சாதனையாளர்களை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்திக் காட்டியுள்ளார் ஆசிரியர். டாக்டர் அரிமா.சி.சுப்பிரமணியம் பதினெட்டு அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்து மானுடத்தை உயர்த்திட நாளெல்லாம் உழைப்பதுடன் பல அறக்கொடைகளுக்குச் சொந்தக்காரர்.
இந்நூலைப் படிக்கும் போது நம்மை பலரது வாழ்வியல் நிகழ்வுகள் வியக்க வைக்கிறது. குறிப்பாக 94 வயதிலும் தளராது நாட்டு நலம் விரும்பும் கல்வித் தந்தை ஆர்.ஜி.எஸ்., (பக். 83), தியாகி குமரன், (சென்னிமலை தியாகி குமாரசாமி) (பக். 112), தியாகி. சுந்தரம்பாள் (பக் 209). தியாகி பி.ராமசாமி (பக். 225) என பல சாதனையாளர்களது வாழ்வியல் நிகழ்வுகள் நம்மை நெகிழ வைக்கிறது. தனிமனித வரலாறு, சமுதாய வரலாறு, திருப்பூர் நகர் வளர்ச்சியென நூற்றுக்கணக்கான செய்திகள் அடங்கியது இந்நூல். திருப்பூர் கலைக்களஞ்சியம் எனப் பெருமையாகப் பேசப்படும் இந்நூல் என்பது உறுதி. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இது போன்ற ஒரு நூல் உருவாக வேண்டும். நல்ல கட்டமைப்பு,
வழவழப்பான தாள்கள். விலையோ மலிவு. ஒவ்வொருவரும் வாங்கி படித்துப் பயன்பெற வேண்டிய நூல்.