கிருபா பதிப்பகம், 1, ஐந்தாவது குறுக்குத் தெரு, தனலட்சுமி நகர், சேலையூர், சென்னை-73. (பக்கம்: 148. விலை: ரூ.50).
தஞ்சை வேதநாயகரின் படைப்புகள் இந்நூலின் ஏழு இயல்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. பெத்லகேம் குறவஞ்சி, ஞான நொண்டி நாடகம், ஞானத் தச்சன் நாடகம் என்னும் மூன்று நூல்களின் மூலம் வேதநாயகர்களின் கவித் திறத்தையும் புலமை வளத்தையும் வேதாகமப் புலமையையும் நூலாசிரியர் மோசசு மைக்கேல் பாரடே கண்டறிந்துள்ளார்.
முதல் இயலில் தமிழ்க் கிறிஸ்தவ இலக்கியங்களின் வளர்ச்சி விரிவாகத் தரப்பட்டுள்ளதால் கிறிஸ்தவ இலக்கியங்கள் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. பின்னிணைப்பாக வேதநாயகரின் படைப்புகள் அனைத்தும் தொகுத்துத் தரப்பட்டுள்ளதால் மேலும் ஆய்வு செய்பவர்களுக்கு அது உதவியாக இருக்கும்.
பெத்லகேம் குறவஞ்சி பற்றிய ஆய்வில் குறவஞ்சியின் இலக்கணத்தையும் ஞான நொண்டி நாடகம் பற்றிய ஆய்வில் நொண்டி நாடக வரலாற்றையும் ஆசிரியர் தெளிவாக விளக்கியுள்ளார். குற்றாலக் குறவஞ்சிக்கு எதிராக இயற்றப்பட்டது பெத்லகேம் குறவஞ்சி என்பதும் ஞானத்தச்சன் நாடகம் தஞ்சையை ஆட்சி செய்த சரபோஜியின் அவையில் அரங்கேறியது என்ற செய்தியும் நூலாசிரியரின் கடின உழைப்பை எடுத்துக் காட்டுகின்றன.
நூலின் இறுதியில் வேத நாயகம் கவிநயம், தமிழ் இலக்கியத்திற்கும் பண் பாட்டுக்கும் தஞ்சை வேத நாயக சாஸ்திரியாரின் பங்களிப்பு, வேதநாயகர் வளர்த்த ஆன்மிகம், பாம்பாட்டிச் சித்தரும் வேதநாயக சாஸ்திரியாரும் என்னும் நான்கு கட்டுரைகள் இணைக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரைகள் வேதநாயகரின் கவிச்சிறப்பையும் ஆன்மிக ஈடுபாட்டையும் விளக்குவனவாய் அமைந்துள்ளன. ஆய்வு நூலாக இருந்தாலும் அனைவரும் படிக்கக் கூடிய அளவில் எளிய நடையில் மோசசு மைக்கேல் பாரடே இந்நூலைப் படைத்துள்ளார்.