39. இலக்கு -2020: நூலாசிரியர்: ஆ.ப.ஜெ.அப்துல் கலாம், ய.சு.ராஜன். வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத் தூர், சென்னை-98, (பக்கம்: 166. விலை: ரூ.50).
பாரத ரத்னா, டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன்பே விஞ்ஞானி ய.சு.ராஜனுடன் `இந்தியா -2020' என்ற நூலை எழுதினார். 2020க்குள் இந்தியாவை ஒரு வளமான நாடாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்ட நூல் இது. இந்தப் புத்தகம் 21வது நூற்றாண்டின் தொடக்கத்தில் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளை விவாதிக்கிறது.
இன்றைய இளைஞன் இந்த நாட்டுக்கு எந்த வழிகளில் வித்தியாசமாகச் செயல்பட முடியும் என்பதையும் இது விளக்குகிறது. மன உறுதி கொண்டு கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என்றும், நமது திறமைகளின் மேல் நாம் கொண்டுள்ள அவநம்பிக்கையே குறிக்கோள்களை அடைவதில் உள்ள மிகப் பெரிய முட்டுக்கட்டை என்றும் கலாம் சொல்கிறார். அரசியல் தலைவர்களும், அரசு அலுவலர்களும் தங்கள் சுயலாபங்களை மறந்து தேச சேவை செய்ய முன்வர வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறார். ஐந்து முதல் பதினாறு வயது வரை வாழ்வின் சிறந்த பகுதி. இந்த வயதில் நல்ல பழக்க வழக்கங்களோடு கூடிய கல்வி அறிவு பள்ளிகளிலும், வீடுகளிலும் புகட்டப்பட வேண்டும். அதற்கு இந்த நூல் பாடமாக வைக்கப்பட வேண்டும்.