உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாவது முதன்மைச் சாலை, சி.ஐ.டி., வளாகம், தரமணி, சென்னை-113. (பக்கம்: 408.)
தொல்காப்பியரின் தொல்காப்பியமே தமிழின் மூல இலக்கண நூல். காலத்துக்குக் காலம் மொழி இலக்கண ஆய்வு நடந்தால் தான் மொழி வளர்ச்சி பெறும். தொல்காப்பியத் தமிழில் அமைந்த முதல் இலக்கண நூல் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அதில் பதிவாகியுள்ள எழுத்தியல் ஆய்வில் பல நெருடல்கள் காணப்படுகின்றன. இவற்றைத் தவிர்த்து தமிழின் அமைப்பியல்புகளைப் புரிந்து கொள்ள ஒரு மாற்று இலக்கண விளக்கம் தேவைப்படுகிறது. தொல்காப்பியரின் இலக்கண விளக்கம் புறநிறைவுக் கோட்பாட்டை மையமாகக் கொண்டது. ஆனால், அகநிறைவுக் கோட்பாட்டிற்குப் புதிய ஆய்வு தேவைப்படுகிறது.
இந்நூலில் அமைந்திருக்கும் ஆய்வுக் கட்டுரைகள் புதிய சிந்தனைக்கு இடம் அளித்து புதிய கோட்பாடுகளை அறிமுகப்படுத்துகின்றன. இலக்கணத் தரவுகள் நடப்பியல் மொழி சார்ந்தனவாக அமைதல் வேண்டும் என்ற முறையில் நூல் முழுவதும் எடுத்துக்காட்டுகள், விளக்கங்கள் சுட்டப்பட்டிருக்கின்றன.
இந்நூலில் பகுதி-1, பகுதி-2 என்று 24 தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் திகழ்கின்றன. நூலில் இறுதியில் சொல் சுருக்க விளக்கமும், கருவி நூல்களும் கட்டுரைகளும், தரவு மூலங்களும் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. மொழி ஆய்வாளர்களுக்கும் தமிழ் அறிஞர்களுக்கும் மிகச் சிறந்த முறையில் தேவைக்கேற்பப் பயன்படும் இலக்கண நூல்.