கம்பன் கழகம், 12, தாண்டல் கந்தசாமி ராஜா தெரு, ராஜபாளையம்-626 117. (பக்கம்: 207. )
கம்பனின் காவியத்தில் நுழைந்து புதிய பல புதுமைக் கருத்துக்களை கூறி நம்மை மகிழ்விக்கும் நூல்களில் இந்நூலும் ஒன்று. படிக்கப் படிக்க இனிக்கும் விதத்தில் இந்நூலாசிரியர் தந்துள்ளார். தவமும் அவமும் என்ற இரண்டாம் கட்டுரையில், தவத்தினால் பெற்ற எல்லாச் சிறப்புகளையும் அவத்தினால் இழந்த ராவணனை ஆய்ந்து கூறுவதும் (பக்.18-26) வார்த்தையை விளக்குவதும் (பக்.38-41) ஆசிரியரின் நுட்பமான ஆய்வுத் திறனுக்குச் சான்றாகும் பகுதிகள். இவ்வாறே, கதிரும் நிலவும், வன்மையும் மென்மையும், பொய்மையும் வாய்மையும், இன்பமும் துன்பமும், அமுதும் நஞ்சும், சாபமும் வரமும், நிழலும் நிஜமும், இசையும் வசையும், அறமும் மறமும், விண்ணும் மண்ணும், தெய்வமும் மனிதனும் என்ற தலைப்புகளில் முரண் தொடையாக விளக்கிச் சொல்கிறார்.மொத்தத்தில் கம்பனது தேனாற்றில் ஒரு கோப்பை பருகுகிறோம். ஆசிரியரின் எழுத்தாற்றல் பாராட்டுக்குரியது. இப்படி அருமையான பல நூல்களைத் தந்திடும் ராஜபாளையம் கம்பன் கழகத்தார்க்குத் தமிழுலகம் நன்றிக் கடன் பட்டுள்ளது.