சாந்தி பதிப்பகம், சென்னை-2. (பக்கம்: 336. விலை: ரூ.150).
உலகப் போர் வரலாற்று ஏடுகளில் நிலையாக இடம் பெறுவதாகும். கி.பி.1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாம் உலகப் போர், அகில உலகையும் கதி கலங்க வைத்தது. வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் உலக நிகழ்வுகள், தலைவர்களின் செயல்கள், ஜனநாயகம், சர்வாதிகாரத்தின் இடையே கிளர்ந்த போர் - மோதல், விளைந்த 99 உடன்படிக்கையால் எழுந்த சர்ச்சை என்ற எல்லாவற்றையும் உள்ளது உள்ளபடி நூலாக ஆசிரியர் அரும்பாடுபட்டு சமைத்துள்ளார்.போலந்து படை எடுப்பில் தொடங்கி ரஷ்யா - பின்லாந்து போர், நார்வே, டென்மார்க், ஹாலந்து படையெடுப்புகள், பிரான்ஸ் அடி பணிதல், மத்திய தரைக்கடல், மாஸ்கோ முற்றுகை, கசபிளாங்கா மாநாடு, பல்ஜ் மோதல், ரைன் ஊடுருவல், ஜெர்மனியின் சரண் அடைவு, அணுகுண்டு வீச்சு, ஜப்பான் சரணடைதல் என்று 36 தலைப்புகளில் நடந்தவற்றை வாசகர் முன் கொண்டு நிறுத்துகிறார் ஆசிரியர்.போர் நாயகர்கள் என்ற பிற்சேர்க்கையில் ஹிட்லர், சர்ச்சில் ரூஸ்வெல்ட், ஸ்டாலின், முசோலினி, டோ÷ஷா, டிகால், டிட்டோ, சுபாஷ் சந்திரபோஸ் என்று 74 பிரதான புள்ளிகளின் சிறு குறிப்பையும் தந்துள்ளார். உள்நாட்டுத் தளபதி ஸ்டாபன்பெர்க் ஹிட்லரைக் கொல்ல சதி செய்ததும் அதிலிருந்து ஹிட்லர் தப்பியதும் (பக்.206-207) அழகாக விளக்கியுள்ளார். உலக வரலாற்றில் உலா காண விரும்புவோர் படிக்க வேண்டிய நூல்.