பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 226.)
ஏறத்தாழ 43 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் பதிப்பாக பழனியப்பா பிரதர்ஸ் இந்நூலை வெளியிட்டிருக்கின்றனர் . வள்ளுவத்தை அடியொற்றி `இறை மாட்சி' எனத் துவங்கி, `இடுக்கண் அழியாமை' என 25 தலைப்புகளில் கட்டுரையை திறனாய்வு நோக்கோடு எழுதியுள்ளார் ஆசிரியர். இந்த நூற்றாண்டின் தலைசிறந்த செந்தமிழறிஞர் கு.மதுரை முதலியார். திருக்குறள் பொருட்பாலில் உள்ள 70 அதிகாரங்களில் 25 அதிகாரத் தலைப்புகளைத் தேர்வு செய்து, ஒவ்வோர் அதிகாரத்தில் உள்ள சில குறட்பாக்களுக்கு விளக்கமும், ஆய்வுரையும் தந்துள்ளார். அதிகாரத் தலைப்பையே கட்டுரைத் தலைப்பாக்கி குறட்பாக்களைப் பதிவு செய்திருப்பது ஒரு சிறப்பு.ஒவ்வொரு குறட்பாக்களின் விளக்கவுரையோடு, சங்க இலக்கியங்களும், கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, நாலடியார், திரிகடுகம், நான்மணிக்கடிகை, பழமொழி போன்ற நூல்களில் இருந்து வள்ளுவத்திற்கு ஒத்த கருத்தை ஒப்பிட்டு ஆய்ந்திருப்பது இலக்கிய ஆர்வலர்களுக்கு மறு ஆய்வுக்கு பேருதவியாயிருக்கும் என்பதில் ஐயமில்லை.
திருக்குறளுக்கு பல்வேறு உரையாசிரியர்கள் உரை தந்துள்ளனர். அவ்வுரைகளை ஆய்ந்து தக்கன எதுவோ அதை உற்று நோக்கி மிகச் சிறப்பாகத் தந்துள்ளார் ஆசிரியர். நல்ல கட்டமைப்பு. விலையோ மலிவு. தமிழர்கள் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூல்.