பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 160.)
பேராசிரியர் ராமமூர்த்தி, வடமொழியிலும் தமிழிலும் புலமை பெற்றவர். கம்பனில் ஆழங்கால் பதித்து கால் நூற்றாண்டாக வால்மீகியையும் கம்பனையும் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து, தொடர்ந்து எழுதியும், மேடைகளில் செந்தமிழ்ப் பொழிவும் ஆற்றி வருகின்ற ஆய்வாளர். கம்ப ராமாயணத்திற்கு திறனாய்வு நூல்கள் அதிகம் முகிழ்ந்து வரவில்லையே என்ற ஏக்கத்தை பலமுறை வெளியிட்டவர் தெய்வத்திரு. அ.ச.ஞா., அத்தகைய குறையை சென்னை கம்பன் கழகமும், மதுரைக் கம்பன் கழகமும் பொன் வைக்கும் இடத்தில் பூ என்ற வகையில் அண்மைக் காலங்களில் சில தரமான ஆழப்புலமை கொண்ட ஆய்வு நூல்களை தமிழுக்கு வரவு வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் பேராசிரியரது இந்நூல் அமைந்திருக்கிறது. வால்மீகியும், கம்பனும் வள்ளலைப் பெற்ற நங்கை, வல்வில் ராமன் என மூன்று தலைப்புகளில் பல அற்புதமான செய்திகளைப் பதிவு செய்துள்ளார்.வான்மீகியின் ராமாயணத்தை கம்பன் எவ்வாறு தமிழில் தந்துள்ளான் என்ற களத்தில் நின்று கொண்டு ஆய்வு நோக்கோடும், தமிழர் நாகரிகம், பண்பாடு, அன்றைய தமிழகத்தின் வளமை இவைகளை பின்புலமாக்கிக் கொண்டு கம்பன் எவ்வாறு காப்பியத்தை நகர்த்திக் காட்டுகிறான் என்பதை ஒரு திரைப்படம் பார்ப்பது போல் மிக மிக எளிமையாக தனக்கே உரிய மணிப்பிரவாள நடையில் கூறியிருப்பது மிக மிக அருமை. காப்பிய இலக்கணம், ராமாயணத்தின் சிறப்பு, வான்மீகியின் தனித்தன்மை, கம்பனின் கை வண்ணம், கம்பன் - வான்மீகி வேறுபாடுகள் என ஆய்ந்து, மேலைநாட்டுக் காப்பியங்களான ஹோமரின் இலியது, வர்ஜிலின் ஈனியட், மில்ட்டனின் இழந்த சொர்க்கம் போன்ற காவியங்களோடு கம்பனின் ராமாயணத்தை ஒப்பிட்டு விளக்கியிருப்பது இது நாள் வரை வராத ஒரு புதுமை. நல்ல ஆய்வு.அடுத்து `வள்ளலைப் பெற்ற நங்கை' என்ற தலைப்பில் ராமாயணத்தின் அரசியர் மூவரில் கோசலையை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்துள்ளார் பேராசிரியர். இவள் தானே தயரதனது மனைவியருள் மூத்தவள். "காமரு கோசலை,' `திறம் கொள் கோசலை,' `ஆற்றல்சால்கோசலை,' `மாதர்கள் கற்பின் மிக்கார் கோசலை' போன்ற, கம்பனது காவிய தொடர்களுக்கு ஆசிரியரது ஆய்வுரை, அவரது நுண்மான் புலமைக்கு எடுத்துக்காட்டு.இறுதியாக `வல்வின் ராமன்' என்ற தலைப்பில் ராமனது போர்த்திறனை வியந்து பேசுகிறார். ராமனை ஒரு போர் வீரனாக்கி, அவன் மேற்கொண்ட போர்கள், போர்நெறிகள், ராமன் கையாண்ட போர்த் தந்திரங்கள் பற்றி விரிவாக விளக்கமாய் சங்க இலக்கியங்களில் இருந்தும், சிலப்பதிகாரம், பகவத் கீதை போன்ற நூல்களின் போர்த் திறன் செய்திகளோடு ஒப்பிட்டுத் தந்திருப்பது சிறப்பாயிருக்கிறது. இலங்கையை ராமன் முற்றுகை செய்து போரிட்ட வித்தகத்தை ட்ராய் நகர முற்றுகை, காஞ்சி வாதாபி முற்றுகை, லெனின் கிராடு முற்றுகை போன்றவைகளோடு ஒப்பிட்டுப் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. மொத்தத்தில் தமிழார்வலர்கள் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய அற்புதமான கம்ப ராமாயண ஆய்வுக் களஞ்சியம்.