பத்மா பதிப்பகம், 21-லோகநாதன் நகர், இரண்டாம் தெரு, சூளைமேடு, சென்னை-600 094. (பக்கம்: 592)
"உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்னும் திருமந்திரவாசகங்களைத் தெளிவுறுத்தும் வகையில், உயிரை உடல் நலம் பேணுதல் மூலமே காக்க முடியும் என வலியுறுத்தும் நூலாசிரியர் முதல் தொகுதியில் தாயின் பேறுகாலப் பராமரிப்பு மூலம் பல பிரச்னைகளுக்கு எவ்வாறு தீர்வு காண முடியும் என்பதை விளக்கியுள்ளார். இரண்டாம் தொகுதியில் குழந்தை வளர்ப்பு ஒரு கலை என்பதை மிகவும் நுணுக்கமாக அணுகியுள்ளார். தொகுதி-3ல் நீரிழிவு, தொகுதி-4ல் ரத்தக்கொதிப்பு, தொகுதி-5ல் மாரடைப்பு, தொகுதி-6ல் எய்ட்ஸ் போன்ற நோய்கள் தடுப்பு முறைகளும் பராமரிப்பு வழிவகைகளும் மிகவும் விளக்கமாக படங்களுடன் எளிய வாசகனும் புரிந்து கொள்ளும் வகையில் விவரிக்கப்பட்டுள்ளன.
"உற்றான் அளவும் பிணியளவும் காலமும் / கற்றான் கருதிச் செயல்' எனத் திருக்குறளுடன் தொடங்கும் இந்நூலில் நூலாசிரியரின் இலக்கிய மேதமை ஆங்காங்கே இழையோடி நிற்கிறது. ஒவ்வொரு நோய் பற்றியும் படங்களுடன் இவ்வளவு எளிமையாக இதுவரை யாரும் எழுதியிருக்க வாய்ப்பில்லை.
மருத்துவம் பயிலும் மாணவர்களுக்குப் பாடநூலாக அமைய வேண்டிய இந்நூலில் நீரிழிவு, மாரடைப்பு போன்ற நோய்கள் பற்றிய கட்டுரைகள் அருமை. நோய்க் குரிய காரணம், பாதுகாப்பு முறை, நோயை வலுவிழக்கச் செய்தல், உணவு முறை, உடற்பயிற்சி, மருத்துவ சிகிச்சை முறைகள், உடலை ஆரோக்கியமாகவும், உள் ளத்தைத் தூய்மையாகவும் வைத்துக் கொள்ளும் முறைகள் பற்றித் தெளிவுறுத்தும் இந்நூல் இன்றைய காலக் கட்டத்தில் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய வீட்டில் வைத்திருக்க வேண்டிய மருத்துவ வழிகாட்டி நூல்.