சாந்தி பதிப்பகம், 27, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 304)
உலக வரலாற்றில் மாவீரர்கள் என்று மதிக்கப்படுபவர்களில் தலைசிறந்தவனாக போற்றப்படுபவன் கிரேக்க மன்னனான அலெக்சாண்டர். 20ம் வயதில் மன்னனாகி 33ம் வயதில் காய்ச்சலால் மரணம் அடைந்த அலெக்சாண்டர் கிரேக்க நாகரிகத்தைப் பிற நாடுகளிலும் பரப்ப விரும்பியே பல நாடுகளின் மீது படையெடுப்பு நடத்தினான். பல நாடுகளை வென்று வெற்றி மேல் வெற்றி பெற்றவனாய் இருந்தும் வாழ்வின் நிலையாமையை உணர்ந்தவன். இறக்கும் தருவாயில் "என் கல்லறையில் என்னை வைக்கும்போது என்னுடைய இந்த இரண்டு கைகளை வெளியே தெரியுமாறு புதைக்க வேண்டும். கல்லறையில், "இதோ இந்தக் கல்லறையில் உறங்குகிறவன் உலகத்தையே வென்றவன் தான்! ஆனால், அவன் இந்த உலகத்தை விட்டுப் போகும்போது வெறும் கையோடு தான் செல்கிறான்' என்ற வாசகத்தைப் பொறிக்க வேண்டும் என்ற விண்ணப்பத்துடன் உயிர் நீத்தான்.
உலகின் மிகப் பெரிய பெரும் தத்துவ ஞானிகளில் ஒருவராகக் கருதப்படும் அரிஸ்டாட்டில் அலெக்சாண்டருக்கு ஆசிரியராய் வாய்ந்தது அவரது அதிர்ஷ்டங்களில் ஒன்று. எனவே தான் மிகச் சிறந்த வீரனாக மட்டுமின்றி சிறந்த ராஜதந்திரியாகவும் நீதிமானாகவும் திகழ்ந்தான் அலெக்சாண்டர். ஆசிரியரின் அலங்கார நடை புத்தகத்திற்கு மேலும் சுவை கூட்டுகிறது.