பழனியப்பா பிரதர்ஸ், ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 420).
தமிழகத்தில் பல ஊர்களின் இன்றைய பெயர் அவை ஆதியில் வழங்கப்பட்டபெயர்களில் இல்லை. காலப்போக்கில் சிதைந்தும், திரிந்தும் மருவியும், மாறியும் தத்தம் முதனிலையை இழந்திருக்கின்றன.
உதாரணம்: பாண்டிநாட்டு கானப்பேர் மிக பழமையான ஊர். அங்கு குடிகொண்டுள்ள ஈசன் மீது சுந்தரர் மிகவும் காதலுற்றுப் பாடிய பத்துப் பாடல்கள் ஒவ்வொன்றிலும் "கானப்பேர் உறை காளை' என்று இறைவனை குறிப்பிட்டார். சுந்தரர் வாக்கின் மேன்மையால் அவ்வூர் இறைவனைக் "காளையார்' என்று மக்கள் அழைக்கத் தொடங்க அவர் இருந்த கோவில் காளையார்கோவில் ஆயிற்று. கோவிலின் பெயரே நாளடைவில் அந்த ஊர்ப் பெயராகவும் கொள்ளப்பட்டு விட்டது!
"கானப்பேர்' காளையார்கோவில் ஆனது போல் தமிழகத்தின் பல ஊர்களின் பெயர்கள் மாறியிருக்கின்றன. சொல்லின் செல்வர் அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளையின் நீண்ட நாள் உழைப்பு, ஆராய்ச்சியின் பயனாய் விளைந்த நூல் "ஊரும் பேரும்.'
"பிள்ளையவர்கள் நிலம், மலை, காடு, வயல், ஆறு, கடல், நாடு, நகரம், குடி, படை, கோ, தேவு, தலம் முதலியவற்றை அடியாகக் கொண்டு நிகழ்த்தியுள்ள ஊர் பேர் ஆராய்ச்சியும், தந்துள்ள அடிக்குறிப்புகளும், இலக்கிய மேற்கோள்களும் தமிழ்ச் சரித்திர உலகுக்குப் பெருவிருந்தாகும்' என்று தமிழ்த் தென்றல் திரு.வி.க., இந்நூலுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். பிள்ளையின் மிடுக்கான தமிழ்நடை அழகு படித்துப் படித்துச் சுவைக்க வேண்டிய ஒன்று.