"கோனார் மாளிகை' 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை-14. போன்: 2813 2863
"மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்' என்ற மகா கவியின் வரியோடு "கடல் வழி வணிகம்' என்ற இந்த நூலைத் தொடங்குகிறார் ஆசிரியர் நரசய்யா. இது இரண்டு பாகமாக அமைந்துள்ளது.
முதல் பாகத்தின் முதல் நான்கு அத்தியாயங்கள் தமிழகத்தில் சங்க காலத்திலும், இடைக் காலத்திலும் நிகழ்ந்த கடற் பயணங்கள், கடல் வணிகங்கள் பற்றிச் சிறப்பாகவும், இந்தியத் தீபகற்ப முழுமை நிலையில் அவை பற்றிப் பொதுவாகவும் விளங்குகின்றன. அடுத்துவரும் ஐந்து அத்தியாயங்களும் ஐரோப்பியர் வருகையாலும், ஆட்சியாலும் நம் நாட்டுக் கப்பற் கலை, கடல் வணிக நிலை ஆகியவை அடைந்த பாதிப்புகளைத் தெளிவாகப் பேசுகின்றன.
இரண்டாம் பாகம் நம் நாட்டுத் துறைமுகங்கள் ஒவ்வொன்று பற்றியும் கூறும் விளக்க அறிக்கைகளாகவும் நமது நவீனக் கடற்படையின் விவரணங்களாகவும், 14 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
மேற்சொன்ன செய்திகளெல்லாம் வரிசையாக, முறையாக தொகுக்கப் பெற்றுள்ளன. இந்நூலாசிரியர் இந்தியக் கடற்படையில் பல ஆண்டுகள் பணி செய்தவர். கப்பல் பொறியியல் தேர்ச்சி பெற்றவர்; வணிகக் கப்பல்களிலும் பணியாற்றியவர்; தன் கப்பல் பயணங்களின் போது உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் சென்று அனுபவம் பெற்றவர். இந்தத் தகுதிகளின் அடிப்படையில் இவர் எழுதியது இந்த நூல்.
இந்த நூலின் நடை எளிமையாகவும், புரிந்து சுவைக்கத் தக்கதாகவும் அமைந்துள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாகப் பின்வரும் பகுதிகள் இங்கு தரப்படுகின்றன.
"உலகத்திலுள்ள எல்லாச் சமுத்திரங்களையும் விட, மத்திய தரைக் கடலும் செங்கடலுந்தாம், சரித்திரத்தில் குறிப்பிட்டுப் புகழப்படும் இடங்கள். கடல்வழி வணிகத்தில் ஆரம்பமே இங்கு தான் நிகழ்ந்தது. இக்கடலைச் சுற்றித் தான் உலகின் சிறந்த நாகரிகங்கள் வளர்ந்தன. மேற்கத்திய நாகரிகத்தின் தாக்கத்தால் மேம்பட்ட இவ்விடங்கள் சரித்திர ஆசிரியர்களை மிகவும் ஈர்த்தன. அதற்குப் பிறகு கடல்
வழிச் சரித்திரத்தை எழுதியதே அரபிக் கடலும் இந்து மகா சமுத்திரமுந்தாம்!' (ப.27)
"முதலில் கரை வழியாக ஆப்ரிக்காவின் கிழக்குக் கடற்கரையிலேயே வணிகம் செய்து கொண்டிருந்தவர்களான ரோமர்கள், சிறிது சிறிதாய் முன்னேறிக் கரை வழியாய் இந்தியத் துணைக் கண்டத்தில் சிந்து முகத்துவாரம் வரை வந்து, பிறகு தமது வணிகத்தை குஜராத் கடற்கரையிலும் தொடர்ந்தனர்!' (ப.28)
தனது நூலின் செய்திகளுக்கு ஆசிரியர் இலக்கியச் சான்றுகளை மிகுதியாகத் திரட்டித் தந்துள்ளார். இவை, ரிக்வேதம், தொல்காப்பியம், பதிற்றுப்பத்து, புறநானூறு, அகநானூறு, பெருங்கதை, சிலப்பதிகாரம், மணிமேகலை, வால்மீகி ராமாயணம், கவுடில்யரின் அர்த்த சாஸ்திரம், மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப் பாட்டு, கம்பராமாயணம் முதலிய நூல்களில் உள்ள குறிப்புகளும் செய்திகளும் ஆகும்.
தொல்பொருள் சான்றுகளுக்கும் பல நூல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் 1975ல் தமிழ்நாடு அரசு வெளியீடாக வந்த "தமிழ்நாட்டுத் தொல் பழங்கால வரலாறு' வெளியீடாக வந்த டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் பல நூல்கள் குறிப்பிடத்தக்கன.
இந்நூலைப் படித்து முடித்த பிறகு, ஆசிரியர் தனது அணுகுமுறையிலும் நோக்கத்திலும் வெற்றி பெற்றுள்ளார் என்ற ஆணித்தரமான கருத்து ஏற்படுகிறது. கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் நூலின் பாணியில் இங்குத் தரவுகள் தொகுக்கப்பட்டுள்ளன என்று எண்ணத் தோன்றுகிறது.
இலக்கியப் பெரும்புகழ் பெற்ற 97 வயது "மணிக்கொடி'ச் சிற்பி "சிட்டி' நூலுக்கு வழங்கியுள்ள அணிந்துரை பற்றி இங்