மீனாட்சி புத்தக நிலையம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை-625 001. (பக்கம்: 580.)
நமக்கு கிடைத்துள்ள தமிழ் நூல்களுள் முதல் நூல் தொல்காப்பியம். "தமிழ் காப்புப் பெருங் கருவூலம் இது' என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். திருக்குறள் போல் தமிழர் ஒவ்வொருவர் வீட்டிலும், கையிலும், மனதிலும் இருக்க வேண்டிய பெருமை உடையது இந்நூல். தொல்காப்பியத்தின் பொருளதிகாரம், உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லாத அருமையுடையது. எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் அமைத்ததோடு வாழ்க்கைக்கும் இலக்கணம் அமைத்தவர் தொல்காப்பியர்.
இத்தகு விழுமிய நூலுக்குப் பழந்தமிழுரைகள் பல உளவேனும், இக்காலத்தில் எழுதப்பட்ட உரைகள் மிகச் சில. முனைவர் தமிழண்ணல் தமிழிலக்கண இலக்கிய நூற்கடல் மூழ்கி முத்துக்கள் எடுத்தவர். பழுத்த புலமையும், பட்டறிவும், பாங்கும் உடையவர். செம்மொழித் தமிழ் உயராய்வு மையத்தின் உதவியால் தொல்காப்பியத்தின் மூலமும் கருத்துரையும் எனும் இந்நூலைப் படைத்தளித்துள்ள அவர் நம் பாராட்டிற்குரியவர்.
தொல்காப்பியத்தின் 1610 நூற்பாக்களுக்கும் இனிய எளிய தமிழில் உரை எழுதியுள்ளார் ஆசிரியர். மரபு பற்றிய ஒரு சூத்திரமும் அதன் உரையும் கீழே காண்போம்: 1591. மரபு நிலை திரியின் பிறிது பிறிது ஆகும். மரபுகள் மாறினால், பொருளுணர்வுகள் வேறு வேறாகிவிடும். சொல்வோன் கருத்துக் கேட்பவனுக்குப் போய்ச் சேராது திரிபுபடும்.
ஒரு வணிக மரபு பற்றிக் காண்போமா? காஞ்சிப் பட்டு இருக்கிறதா என வினவி வந்தவர்க்கு, (அஃது இல்லாதபோது) "ஆரணிப் பட்டல்லதில்லை' என்று (இருக்கும் ஒன்றை) கூற வேண்டும். காஞ்சிப் பட்டு இல்லை என்று கூறுவது மரபன்று.
புலவர், பேராசிரியர் என்றில்லாது எவரும் படித்துத் தொல்காப்பியத்தை அறிந்திட , இந்நூல் பேருதவி செய்யும்.