காவ்யா, 16, இரண்டாவது குறுக்கு வீதி, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 618.)
கோவை ஞானி நல்ல வாசகர், சிறந்த விமர்சகர். படித்ததை எடுத்துச் சொல்வதிலும் சமர்த்தர். திறனாய்வுக் கட்டுரையாக எழுதுவதிலும் வல்லவர். தமிழில் வெளிவந்துள்ள சிறந்த பிரபல, பிரபலமாகாத நாவல்களைப் பற்றி எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் கொண்டு வரப்பட்டுள்ளது. சில கருத்தரங்குகளில் எழுதி வாசிக்கப்பட்ட கட்டுரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன. ஒரே எழுத்தாளரின் இரண்டு, மூன்று நாவல்களைப் பற்றி எழுதுகையில் ஞானி பாத்திரங்களுக்கிடையே உள்ள ஒற்றுமை வேற்றுமை பற்றி எல்லாம் எழுதியிருக்கிறார்.
நகுலனின் "நினைவுப் பாதை' என்ற நாவல் பற்றி எழுதுகையில், "எழுத்து பற்றிய ரசனையை அதின் அடிமட்டத்திற்கு (கீழ் மட்டத்திற்கு அல்ல) கொண்டு வந்ததில் இவர் சிறப்புக்குரியவர்' எனக் குறிப்பிடுகிறார். ஜெயகாந்தனின் "ஜய ஜய சங்கர' என்ற நாவல் விமர்சனத்தில், "இந்திய கலாசார மரபின் பலத்தை இந்த நாவல் போல எடுத்து நிறுத்தியது வேறு எதுவும் இல்லை' எனக் குறிப்பிடுகிறார். வித்தியாசமான விமர்சன பதாகை ஏந்தி வாசகர்களின் நெஞ்சின் ஊடே பயணம் செய்யும் சுவையான கட்டுரை தொகுப்பு.