பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 144+8.)
"கபாலி நீள் கடிமதில் கூடலக ஆலவாய்'' என திருஞானசம்பந்தராலும், ""எத்தலத்தினும் ஏழுவரும் புகழ் / முத்தும் முத்தமிழும் தந்து முற்றுமே'' என கம்பராலும் போற்றப்பட்ட ஆலவாய் எனும் அழகிய மதுரை மாநகரத்தின் வரலாற்றைச் சான்றாதாரங்களுடன் எடுத்தியம்பும் இந்நூலின் கண் சீலைச்சுவடிகள் (சங்க இலக்கியம்) கல்வெட்டுகள், நாணயங்கள், செப்பேடுகள், வெளிநாட்டவர் குறிப்பு என அனைத்தும் ஆங்காங்கே ஆதாரங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
சங்க இலக்கியங்களில் மதுரை பற்றிய மேற்கோள் பாடல்கள் அதன் தொன்மையை, பண்பாட்டுச் சிறப்பை உணர்த்துகின்றன.
பாண்டியர் காலத்து 79 நாணயங்களை ஆய்வு செய்துள்ள நாணயவியல் அறிஞர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, ""முப்பெரும் தென்னகத்து அரசர்களுள் பாண்டியர்களே மிகவும் தொன்மையானவர்கள். இந்த வம்சம் தான் கி.மு.300ம் ஆண்டிலிருந்து கி.பி.1300 வரை இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது'' என்னும் கருத்தை நூலாசிரியர் எடுத்தாண்டு ஆதாரமாக்கியுள்ளார்.
யானை மலை, திருப்பரங்குன்றம், மேட்டுப் பட்டி, அழகர் மலை போன்ற பல்வேறு கல்வெட்டுகள் பற்றியும், தாலமி (பக்., 32) என்னும் வெளிநாட்டு அறிஞரின் குறிப்பையும் எடுத்தாண்டுள்ள நூலாசிரியர், பாண்டியர் காலம், இஸ்லாமியப் படையெடுப்பு, நாயக்கர் காலம், ஆங்கிலேயர் ஆட்சி, ஆலவாய்த் திருத்தலங்கள் போன்றவற்றின் சரித்திரக் குறிப்புகளோடு சமணர்களும் தென் தமிழகமும் பற்றியும் குறிப் பிட்டுள்ளார்.
சீன நாட்டுத் தொழிலாளர் மலையிலிருந்து இறங்கும் காட்சி ""பொன் தோண்டி எறும்புகள்'' (பக்., 12), சங்கப்பாடல்களில் மதுரை மதிரை என்றும் குறிப்பிடப்படுகிறது (பக்., 16), நாற்பது ஆண்டு ஆட்சி செய்த ருத்ராம்பாள் பற்றிய மார்க்கோபோலோ குறிப்பு (பக்., 50), 1666ல், செஞ்சியில் இஸ்லாமியர் செய்யும் அட்டூழியம் குறித்து ஆண்டரே ப்ரெயர் பாதிரி, பால் பாதிரிக்கு எழுதிய கடிதம் (பக்., 69).
இந்துத் துறவிகளைப் போல காவி உடை உடுத்தி, சைவ உணவை அருந்தி இராபர்ட் டி நோபிலி கிறிஸ்தவ மதத்தினைப் பரப்பினர் (பக்., 70), நாயக்கர் ஆட்சி முறையில் தளவாய், பிரதானி, இராயசம் ஆகிய மூவர் தாம் அரசை நடத்தியவர்கள் (பக்., 75) ராணி மங்கம்மாள் காலத்தில் சவுராஷ்டிரர்கள் அந்தணர்கள் போல பூணூல் அணிய தீர்ப்பு வழங்கப்பட்டது (பக்.,75).
பீடர் பாண்டியன் மீனாட்சி அம்மையின் குதிரை வாகனத்திற்கு வழங்கிய விலை உயர்ந்த தங்கக் கால்மிதிகளை இன்றும் அம்மன் குதிரை வாகனப் புறப்பாட்டின் போது அணியப்படுகின்றன (பக்., 93) மயில் தான் இடும் முதல் முட்டையை அழித்துவிடும்.
பட்டர்கள் வழியில் முதலாவது ஆண் மகனுக்கு உரிமையில்லை (பக்., 101), இப்படி ஏராளமானத் தகவல்களைத் தரும் இந்நூலின் இணைப்பில் ""மைசூர் போர்கள்'' ஆலவாய்த் தல வரலாறு குறிப்பிடப்பட்டுள்ள இலக்கியங்கள், "மதுரை ஸ்தானீகர் வரலாறு', "மதுரை தல வரலாறு' "தமிழ் பிராமிக் கல்வெட்டுகள்' இவற்றுடன் ஓவிய, சிற்பங்களின் படத்தொகுப்பும் நேர்த்தியாக அமைந்துள்ளது.
மதுரையின் பெருமைகளை ஓர் ஆய்வாளர் நிலையிலிருந்து மிகச் சிறப்பாகத் தொகுத்து, நூலாசிரியர் என்ற நிலையில் ஆங்காங்கு மேற்கோள்களைக் கையாண்டு, இலக்கிய ரசனையுடன் வரலாற்றைச் சுவைபடத் தந்துள்ள நரசய்யாவின் தமிழ்ப் பணி பெரும் பாராட்டிற்குரியது.
பழனியப்பா பிரதர்ஸ் தயாரித்துள்ள இந்நூல் மதுரை பற்றி (காந்தி மன மாற்றம் பெற்றது வரையிலான) வரலாற்றுக் கலைக்களஞ்சியம். படித்துப் பாதுகாக்கப்பட வேண்டிய கருத்துக் கருவூலம்.