குமரன் பதிப்பகம், 3 முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 136)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலரான தா.பாண்டியன், இரண்டாம் முறையாக சீனா சென்று வந்த பயண அனுபவங்களை இந்தப் புத்தகத்தின் வாயிலாக நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். காந்தியவாதியும், சிறந்த பொருளாதார நிபுணருமான ஜே.ஸி.குமரப்பாவின் சீனப் பயணக் குறிப்பும் இந்தப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
பொதுவுடைமைக் கொள்கையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் சீனா விலகி, தனியார் துறை மூலம் தொழில்கள் துவங்க முன்வந்துள்ள கால கட்டம் இது. முதலாளித்துவ நாடுகளுடன் வணிகம் செய்து வருகிறது சீனம். சைக்கிள் இருந்த இடத்தில் கார்கள், எல்லாமே அரசு தான் செய்ய வேண்டும் என்ற நிலை மாறி, தனி மனிதர்களே தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளத் துவங்கி விட்டனர். இத்தகைய இன்றைய பின்னணியில் இந்தப் புத்தகத்திற்குள் நுழைவது நல்லது.
சீனப் பெருஞ்சுவரையும் அகலமான நீண்ட நெடுஞ்சாலைகளையும், மக்கள் மனதில் காணும் மாற்றங்களையும், பாம்புக்கறி சாப்பிட ஆசைப்பட்டதையும், உப்பு இல்லா உணவு பற்றியும், தரம் பார்த்து அனுபவித்து உணர்ந்து பரவசப்பட்ட அனைத்து விவரங்களையும் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். சீனாவைத் தெரிந்து கொள்ள உதவும் நூல்.