சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை-600 005, (பக்கம்: 218)
வைணவத் தத்துவங்களை மிக நுட்பமாக ஆழ்வார்கள் தம் பாசுரங்களில் கூறினார். நாதமுனிகள் எனும் ஆசாரியர் ஆழ்வார்கள் பாசுரங்களைத் தொகுத்து, நாலாயிரத் திவ்ய பிரபந்தமாகக் கொடுத்தார். அந்நூலிற்குப் பல பெரியோர்கள் மணிப்பிரவாள நடையில் - தமிழும், வடமொழிச் சொற்களும் கலந்து விரிவுரை எழுதியுள்ளனர். அவற்றுள் பெரியவாச்சான் பிள்ளை எனும் ஆசாரியர் எழுதிய அற்புதமான உரையினை, எளிய, இனிய பழகு தமிழில் எம்.ஏ.வெங்கடகிருஷ்ணன் தமிழாக்கம் செய்துள்ளார். அதை தமிழக மக்கள் பயனுற, சென்னைப் பல்கலைக்கழகம் 150ம் ஆண்டு வெளியீடாக தற்போது வெளியிட்டுள்ளது.
திருப்பல்லாண்டு 12 பாசுரங்களை உடையது; அப்பாசுரங்களுக்குரிய உரையே இந்நூல். எம்பெருமானுக்கு பூமாலை தொண்டு செய்து வந்த பெரியாழ்வார், அவனுக்கு தீங்கு வராதிருக்க பல்லாண்டு பாடினார் என்ற செய்தியும் (பக்., 43), மல்லாண்ட திண் தோள் என்ற வாக்கியத்திற்கு உள்ள விளக்கமும் (பக்., 68) `கூழாள் பட்டு' என்ற சொல்லிற்கு தரும் விளக்கமும் (பக்., 98) இந்நூலாசிரியரின் ஆழ்ந்து, அகன்ற, இருமொழி ஞானத்திற்கு எடுத்துக்காட்டான சில இடங்கள் ஆகும்.
நம் முன்னோர்கள் வைத்துச் சென்ற புதையலை இன்றுள்ள தமிழக மக்கள் அறிந்துகொள்ள இதுபோன்ற நூல்களை வெளியிடுவது, சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் பணியாகும்.