ஷ்ரீ சாரதா மடம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 213).
ராமகிருஷ்ண பரமஹம்சரின் சகதர்மினி அன்னை சாரதா தேவி, பெண்கள் போற்றி வழிபடும் ஒரு ஆதர்ஷ பெண்மணி. ஷ்ரீராமகிருஷ்ணர், தமது பணி தொடர சுவாமி விவேகானந்தரையும், அன்னையையும் நமக்கு விட்டுச் சென்றுள்ளார். அன்னையின் சாந்த சொரூபியான உருவமும், கருணை பொங்கும் பார்வையும் அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடிய காந்த சக்தி. அவருடைய செயல்பாடுகள் நமக்கு வாழ்க்கையைப் புரிந்து கொள்ள ஏதோ ஒரு வகையில் உதவக்கூடியவை. அவருடைய கருத்துக்களோ எல்லா நாளும் நினைத்து அசைபோட்டு தெளிவடைய உதவும். இத்தகைய சிறப்பம்சங்கள் கொண்ட அன்னையை, அவருடைய சாரதா மடத்தைச் சார்ந்த பிரம்மச்சாரிணிகள் இந்த நூல் மூலம் நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். மூன்று தொகுதிகளாக, வாழ்க்கையில் அடிப்படை பற்றிய படிப்பினைகள், மனிதப் பண்புகள், அணுகுமுறை, வாழ்வில் முழுமை அடைதல் - பற்றி விரிவாக அன்னை கூறியவற்றை பிரித்து தொகுத்து வழங்கியிருக்கின்றனர். புத்தகத்தின் கடைசியில் அன்னையின் புகைப்படத் தொகுப்பு ஒன்றையும் இணைத்துள்ளனர். நல்ல காகிதத்தில் தரமாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தை பூஜை அறையில் வைத்து அன்றாடம் எடுத்துப் படிக்கலாம். அந்த அளவுக்கு தூய, புனித, உயர்ந்த கருத்துக்களை உள்ளடக்கிய அன்னை சாரதா தேவி பற்றிய நூல் இது.