ஆசிரியர்: தமிழருவி மணியன், வெளியீடு: கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தியாகராய நகர், சென்னை 600 017. (பக்கம்:200, விலை:).
அறிவார்ந்த பெருமக்கள் பேரவையில் இன்றைக்கு தமிழ்ப்பொழிவை நடத்தி வருகின்ற பொழிவினைப் போலவே அவரது எழுத்தோவியங்களும் அமைந்திருப்பது இறைவன் அவருக்கே வழங்கிய அருட்கொடை.
வார இதழில் இருபத்தைந்து வாரங்கள் தொடர்ந்தாற் போல், "மறக்க முடியாத மனிதர்கள் என்ற தலைப்பில் தமிழருவி மணியன் எழுதிய கட்டுரைத் தொடர் தற்போது புத்தக வடிவில் கற்பகம் புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறது.
ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கின்ற போது, அப்புத்தகத்தை முழுமையாக ஒரே மூச்சில் வாசித்து வைக்க வேண்டும் என்ற வேட்கையை; எப்புத்தகம் விதைக்கிறதோ, அப்புத்தகம் ஜீவிதமானவை என்று சொன்னான் மேலைநாட்டு திறனாய்வாளன் கார்லைல். அந்த உயிரோட்டத்தை இப்புத்தகம் வாசிப்பாளனுக்கு ஊட்டுகிறது.
இருபத்தைந்து தலைப்புகள் பெருந்தலைவர் காமராஜர், மகாத்மா, நேரு, சாவர்க்கார், சிவா, வ.உ.சி., திலகர், அம்பேத்கர், ராஜாஜி, ஈ.வெ.ரா., ஜீவா, தேவரய்யா என தலைசிறந்த தியாகச் செம்மல்களின் வாழ்வியல் சரிதையோடு, உதிரத்தை உறைய வைக்கும் சில நிகழ்வுகளை தமக்கே உரிய தமிழில் குற்றாலத்து அருவியாக கொட்டி வைத்திருக்கிறார் தமிழருவி.
"லண்டனில் மகாத்மா காந்தி படித்த போது மூன்று வேளை உணவுக்கு ஆறு பென்ஸ் செலவழிக்கச் சிரமப்பட்டார். வல்லபாய் பட்டேல் கல்லூரிக்கு நடந்தே சென்றார். ஆனால்,நேரு ஆண்டுக்கு 800 பவுண்ட் செலவழித்து ஓர் இளவரசன் போல் வாழ்ந்தார் பக்கம் 23.
"சனாதன தர்மத்தில் ஆழமான நம்பிக்கை கொண்ட வ.வே.சு. ஐயரின் வீர சுதந்திர வேள்வியில் சேரன்மாதேவி குருகுலச் சம்பவம் ஒரு களங்கமாகிப் போனது வருத்தத்திற்குரியது. பக். 62.
"சுத்த சைவரான சிதம்பரம் பிள்ளை கண்மூடும் கடைசித் தருணத்தில், "நமசிவாயம் வாழ்க என்ற திருவாசகம் கேட்கவில்லை. சிவகுருநாதன் என்ற காங்கிரஸ் தொண்டரை என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம் எனும் பாரதியின் பாடலைப் பாடச் சொல்லி கடைசி மூச்சைத் துறந்தார்.பக். 65.
"எவனொருவன் பலாத்காரத்தில் ஈடுபடுகிறானோ, அவன் என் இதயத்தைப் பிளந்து ரத்தத்தைக் குடித்த பாவியாவான் என்று முழக்கமிட்டவர் பசும்பொன் தேவர். பக்.188.
இதுபோன்ற பல பதிவுகள் இப்புத்தகத்தில் உள்ளன. இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டிக் கருவூலம். இன்றே வாங்கிப் படியுங்கள்.