விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
கருவறையிலேயே கலைப்பு முயற்சிக்குத் தப்பி, கள்ளிப் பால் சதியைத் தாண்டி வந்து... கணவன் வீடு சேர்ந்த பிறகும் அடிப்படை வாழ்க்கையை நடத்துவதற்கே ஒரு பெண் எத்தனை துயரங்களைத் தாங்க வேண்டியிருக்கிறது!
விளக்கேற்ற ஒரு பெண் வேண்டும் என்று வலது காலெடுத்து வரச் சொல்லிவிட்டு, அவளையே சொக்கப்பனையாக எரித்துப் போடுகிற இரக்கமற்ற ஜென்மங்களை சமூகம் தினம் தினம் சந்தித்துக்கொண்டுதானே இருக்கிறது!
பெண்கள் பொறுமையின் சிகரங்கள், அறுத்துப்போட்டாலும் அன்பைத் தவிர வேறெதுவும் சுரக்கத் தெரியாதவர்கள் என்பதுதான் அவர்களுக்கு எதிரான கொடுமைகள் பல்கிப் பெருக முக்கியக் காரணம். கூடவே, குடும்ப கௌரவம் என்ற பெயரில் அர்த்தமில்லாத கட்டுப்பாடுகளை வகுத்துக்கொண்டு, எத்தனை கொடுமைகள் நடந்தாலும் அவளைப் பொறுத்துப் போகச் சொல்லி, மீண்டும் மீண்டும் மிருகத்தின் கூண்டுக்குள்ளேயே தள்ளிவிடுகிற பெற்றோரை யார் மாற்றுவது?
சேஜ் பப்ளிகேஷன்ஸ் ஆங்கிலத்தில் வெளியிட்ட பிஹைன்ட் த க்ளோஸ்ட் டோர்ஸ் புத்தகம், இந்தத் துன்பக் கடலில் இருந்து உப்புக்கரிக்கும் சில துளிகளை மட்டும் நம் முன் எடுத்து வைக்கிறது. அதன் தமிழ் வடிவமே இந்நூல்.
இந்நூலைப் பொறுத்தவரை, மூலப் பிரதியின் சில பகுதிகள் தமிழ் மண்ணின் தன்மை கருதி சற்றே மாற்றியமைக்கப்பட்டும், சுருக்கப்பட்டும் உள்ளன. நூல் எழுதப்பட்ட காலகட்டத்துக்கு மட்டுமே பொருந்தக்கூடிய சில புள்ளிவிவரங்களும் இதில் தவிர்க்கப்பட்டுள்ளன.
பக்கங்களைப் புரட்டும்போது பல சமயங்களில் உங்கள் கண்களைப் பனிப் படலம் மறைக்கலாம். இமை தாண்டிச் சொட்டுகிற ஒவ்வொரு துளியும், பரிதாப ஆத்மாக்களைப் பொசுக்கிக் கொண்டிருக்கும் குடும்ப வன்முறை என்ற கொடுந்தீயைச் சிறிதேனும் அணைக்க உதவட்டும்.