பண்டைக் காலந்தொட்டே, தமிழ் சமூகத்தில் ஆண்டிகளும் மன்னனுக்கு பெண் கொடுக்க மறுத்துள்ளனர். இதற்கு காரணம், கீழ்த்தட்டு மக்களின் இனப்பற்றும், குல மானமும், குலத் தூய்மையுமே ஆகும். மேலும், அனைத்து இனங்களும், சம்பந்த வழி உறவுடைய கிளையினருடன் மட்டுமே, மண உறவு வைத்து கொள்கின்றனர்.
‘‘புல்லு அறுத்தா தொழுபட்டிக்குத் தான்
புள்ள சமஞ்சா அரண்மனைக்குத் தான்’’
எனும் நாட்டுப்புற பாடல் மூலம், தமிழ் சமூகத்தில், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை எந்த அளவிற்கு முற்காலத்தில் இருந்தது என்பதை ஒருவாறு ஊகிக்கலாம். பெண்களின் விருப்பமின்றி அவர்களை ஆதிக்க வர்க்கம் அடைய முற்பட்டபோது, அவர்கள், கற்பைக் காத்துக்கொள்ள, குடும்ப மானங்காக்க, தற்கொலை புரிந்துள்ளனர் அல்லது பெற்றோர், சகோதரர்களால் சாகடிக்கப்பட்டுள்ளனர் என்பதை, பல வாய்மொழிக் கதைகள் மூலம் நிறுவியுள்ளார் நூலாசிரியர்.
அதேபோன்று, பெண்ணடிமை, பெண்ணுரிமை மறுப்பு சங்க இலக்கியங்களில், ‘மகட்பாற்காஞ்சிப்’ பாடல்களில் காண முடிகிறது. மகட்கொடை வேண்டி முதுகுடி மன்னர்கள் மேல் வேந்தர்கள் படையெடுத்துள்ளனர். மகட்கொடை மறுத்த முதுகுடி மன்னர்களின் ஊர்கள் அழிக்கப்பட்டன.
மற்றப் பாடல்களில் பெயர் சுட்டிப்பாடும் மரபை பின்பற்றும் புலவர்கள், இவ்வகைப் பாடல்களில், மகட்கொடை வேண்டி போரிட்ட வேந்தரின் பெயரை மறைத்ததோடு, ஊரின் அழிவுக்குக் காரணம் ‘முதுகுடி மன்னர் மகளின் அழகும், மகளைப் பெற்ற தாயுமே’ என, பெண்கள் மீது பழியைப் போட்டுள்ளனர் (பக்.36) என்பதை, தோலுரித்துக் காட்டியுள்ளார், நூலாசிரியர்.
மகட்கொடைக்காகப் போரிடும் வேந்தரின் நோக்கம் மருத நிலத்தைக் கைப்பற்றவே என்ற கூற்றுகள் ஆய்வுக்குரியவை.
இடைக்காலத்திலும் தொடர்ந்த இந்நிகழ்வுகளில், ஆளும் வர்க்கத்தை எதிர்த்து நிற்க முடியாதோர், தங்கள் பெண்களைக் கொன்றனர் அல்லது புலம் பெயர்ந்தனர் என, நூலாசிரியர், சுட்டுகிறார். அவ்வாறு கொன்ற பெண்களை, கன்னித் தெய்வமாக வழிபட்டனர் என்பதையும் பதிவு செய்துள்ளார்.
எல்லா காலகட்டங்களிலும் பெண்ணடிமை, பெண்ணுரிமை மறுப்பு, பெண்களைப் போகப் பொருளாக நினைத்தல் போன்ற அவலங்கள் இருந்துள்ளன என்பதை, இலக்கியங்கள் துணை கொண்டு நடுவுநிலைமையோடு ஆய்வு செய்துள்ளார்.
– புலவர்.சு.மதியழகன்