ராவணனின் பெருமைகளையும், அவனது முறையற்ற செயல்களையும், சைவ, வைணவ நூல்களின் துணையுடன் தொகுப்பாசிரியர் மிக அருமையாக, பதிவு செய்துள்ளார். ராவணன் என்ற சொல்லிற்கு அழுதவன், பிறரை அழவைத்தவன் என்று பொருள் (பக். 9). ராவணன் தவவலிமையால் பெற்ற வரம் (பக். 20), தசமுகன் எனும் பெயரை, ராவணன் எனும் இறவாப் பெயராக சிவபெருமான் ஈந்தது (பக். 38), ராமன் கடல் கடந்து செல்லும் முன்பாக, ‘பிரயோபவேசம்’ என்ற விரதம் மேற்கொண்டான் (பக். 98), ராமன், ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்த செய்தியை சைவர்களும், வைணவர்களும் மாறுபட்டுக் கூறும் விவரம் (பக். 109), ‘கழுவேற்றுவித்த எழில்தோள் எம் இராமன்’ எனும் பெரியாழ்வார் பாசுர அடிகளுக்குச் சரியான பொருள் (பக். 174) ஆகியவை சுவாரசியமானவை.
விபீஷணனை ஒரு சகோதரத் துரோகியாக, காட்டிக் கொடுக்கும் கைக்கூலியாகக் கூறுமிடத்தை (பக். 254), விபீஷணனை ஆழ்வாராக போற்றுவோர் ஏற்க மாட்டார்கள் என்பதை, தொகுப்பாசிரியர் உணர வேண்டும்.
நூலின் இறுதியில் உள்ள குறிப்பு விளக்கம், படிப்போர்க்கு மிகவும் பயன்படும்.
டாக்டர் கலியன் சம்பத்து