மும்பை தாராவியில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை உடன், இந்த மலர் துவங்குகிறது. கடந்த ஆண்டு, 1,500 குடும்பங்கள், தாராவியில் ஒரே இடத்தில் பொங்கலிட்டு, கொண்டாடி உள்ளனர். வெள்ளம், வறட்சி என தமிழகம் அவதிப்பட்டு வரும் நிலையில், கோவில் குளங்களில் நீர் சேமிப்பது குறித்த முன்னோர் தொழில்நுட்பம் தொடர்பான கட்டுரை வரவேற்கப்படத்தக்கது.
கர்நாடக சங்கீத வாத்தியங்களில் ஒன்றான கடம், தயாரிக்கப்படுவது குறித்த கட்டுரை, நாய்கள் கண்காட்சி குறித்த, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் பேட்டி, மலைகளில் உள்ள பழமையான கல்வெட்டுகள் குறித்த தொகுப்பு, நகர மக்களுக்கு மட்டுமின்றி இன்று கிராமத்தவருக்கும் அன்னியமாகிப் போன உடன்குடி கருப்படி தயாரிப்பு தொழில் பற்றிய விரிவான அலசல் என, சுவாரசியமான கட்டுரைகள் இந்த மலரில் இடம் பெற்றுள்ளன.
மணப்பாறை மாட்டுச் சந்தை, கரீபியன் தீவுகளில் வசிக்கும் தமிழர்கள், சுசீந்திரம் கோவில் ஓவியங்கள், பாளையங்கோட்டை சிறை என, படிக்க படிக்க அலுக்காத கட்டுரைகள் குவிந்து கிடக்கின்றன.
-விகிர்தன்