இலக்கிய ஆராய்ச்சி என்பது எவ்வளவுதான் அறிவியல் ரீதியாக செய்ய புகுந்தாலும், மக்கட்சமுதாயத்தினுடைய மரபுகளையும், குறிக்கோளையும், கற்பனைகளையும் உண்மை நிலையையும் அடியோடு மறுத்து எழுதுதல் இயலாது.
எல்லார்க்கும் ஒப்ப முடியும் கருத்தாக ஆராய்ச்சியின் முடிவு இருக்க வேண்டுவது இல்லை. அது சமுதாயத்தின் அறிவாக்கத்தில் சிறிதாகிலும் தூண்டுகையை உண்டாக்கும் வண்ணம் திகழும்போதே நிறைந்த ஆராய்ச்சி என, மதிக்கப்பெறுகிறது.
இன்று மொழி, இலக்கணம், இலக்கியம் தவிர, நாட்டுப்புறவியல், கல்வெட்டியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் உள்ளடக்கிய
ஆய்வுகள் தமிழில் நடந்து வருகின்றன.
எதிர்கால தமிழிய ஆய்வுகள் வளர்ச்சியும், செழுமையும் அடைவதற்குரிய அணுகுமுறைகள் நுட்பமாகவும், விரிவாகவும் இந்த நூலுள் விளக்கப்பட்டுள்ளன. துறைதோறும் இதுகாறும் எழுந்துள்ள ஆய்வுகள், அவற்றின் தரம், அணுகுமுறை, ஆய்வின் போக்கு, மதிப்பீடு ஆகியன பற்றி, நுணுக்கமாக குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர்.
ஆராய்ச்சியில் காணப்படும் பல குறைகளும் இந்த நூலுள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு பொருளின் தன்மை பற்றி, அதற்கென்று ஒரு கோணம் உண்டு. அதன் வழியே தான், அதை பார்க்க வேண்டும். அதை விட்டு, ஒருவர் குற்றம் கண்டுபிடிக்கும் நோக்கோடு தான் பார்ப்பேன் என்பது சிறந்த ஆய்வாளருக்கு அழகன்று. மேலும் கூறியது கூறல், செய்தது செய்தல் போன்ற ஒற்றைப்போக்கு ஆராய்ச்சி, வழக்கு இழந்த நூல்களின் வாழ்வு, பாடத் திட்டத்தின் கூனலும் குறுகலும் தேக்கமும் காரணமும், ஆய்வாளரின் இனப்பற்று, பண்டித
மனப்பாங்கு, அறிவுக்கண் இடர்ப்பாடு, மொழிபெயர்ப்புத் திறன் பற்றாமை, தலைமையில் வறுமை, கூட்டு முயற்சியின்மை போன்ற குறைபாடுகளும், அதற்கான தீர்வுகளும் நூலுள் சுட்டப்பட்டுள்ளன.
‘தகுதியற்ற ஆசிரியர்களாலும், துணைவேந்தர்களாலும் உருவாக்கப்படும் மாணவர்கள், நல்லறிஞர்களாக உருவாக மாட்டார்கள். தனி ஒரு பேராசிரியர், ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதை மாற்றி, பேராசிரியர்கள் அடங்கிய குழுக்கள், ஆய்வு மாணவர்களை நெறிப்படுத்த வேண்டும்’ என்பன போன்ற ஆலோசனைகளையும் கூறியுள்ளார் நூலாசிரியர்.
கல்வெட்டியல் மற்றும் நாணயவியல் தொடர்பாக, ‘தினமலர்’ நாளிதழ் ஆசிரியர், டாக்டர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, நூல்களை வெளியிட்டு
தமிழக வரலாற்றின் இருளை போக்கிக் கொண்டு வருகிறார் (பக்.140) என்பதை நூலாசிரியர், தக்க தருணத்தில் சுட்டிக் காட்டி உள்ளார். ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வு மேம்பட பயன்படுத்த வேண்டிய முதன்மையான நூல்.