இந்திய கலாசாரத்தில், வரலாற்றில், சமய வாழ்வில், இலக்கியத்தில், மக்கள் சிந்தனையில் என அனைத்திலும் இடம் பெற்றுள்ள விஷயங்களில், காசியும் கங்கையும் குறிப்பிடத்தக்கவை. 1950களில், காசியில் கங்கையின் ஒரு கரையில் மக்கள் நீராட, மறுகரையில் நீர்யானைகளும் டால்பின்களும் மூழ்கி எழுந்த காலமாக இருந்தது. உலகின் முதல் நூலாக கருதப்படும் ரிக்வேதத்தில் காசியைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. காசி, கங்கை பற்றி வேத, புராண, இதிகாச, இலக்கியங்களில் வரும் குறிப்புகள் அனைத்தையும் நூலாசிரியர் தொகுத்து, சுவாரசியமான முறையில் அளித்துள்ளார்.
காசி துவங்கி இலங்கை வரை, நூலாசிரியர் வெவ்வேறு காலகட்டத்தில் மேற்கொண்ட புனிதத் தல யாத்திரைகளை இனிதே கலந்து எழுதியுள்ளார். பொதுவாக, பலரும் விபீஷணனை தவறாக நினைக்கின்றனர். ஆனால், இலங்கையில் அவனுக்கு கோவில் உள்ளது.
வால்மீகி, காளிதாசன், கம்பர், பாரதி என அனைவரும் கூறிவந்த ‘இந்த நாடு ஒரே நாடு’ என்ற கருத்தை நூலாசிரியர் தன் அனுபவத்தில் வெளிப்படுத்துகிறார்.
திருநின்றவூர் ரவிக்குமார்