வசதியற்றவர்களாக, நிலமற்றவர்களாக இருந்த தமிழக பறையர்கள் விவசாயிகளாக உயர்ந்து, பக்கத்து நாடுகளுக்குக் கூலித் தொழிலாளர்களாகக் குடிபெயர்ந்து, பிறகு படிப்படியாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய வரலாற்றை நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறார் கொல்கத்தா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராஜ்சேகர் பாசு.
ஆய்வுக்காக அவர் எடுத்துக்கொண்ட காலகட்டம் 1850 முதல் 1956 வரை. ‘சேஜ் இந்தியா’ வெளியிட்டு வரும் நவீன இந்திய வரலாற்று நூல் வரிசையில் இடம்பெறும் ஒரு புத்தகம் ‘நந்தனின் பிள்ளைகள்’.
தமிழகத்தில், தீண்டத்தகாதவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் திரளான மக்கள் கூட்டத்தில், பெரிய சமூகமாக இருந்தவர்கள் பறையர்கள். 19ம் நூற்றாண்டு இறுதிவரை நிலம் சார்ந்த அடிமைமுறை, தமிழகத்தில் நீடித்து வந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. அந்த ஆதாரங்களை நோக்கும்போது, பறையர்கள் நாகரிக வளர்ச்சியற்ற அடிமைகளாகவே கருதப்பட்டனர் என்பதை அறிய முடிகிறது. அந்த நிலையில் இருந்து விவசாயிகளாக உயர்வதற்கே அவர்கள் போராட வேண்டியிருந்தது. பறையர்களிடம் நிலம் சென்று சேராதபடிக்கு நிலச்சுவான்தார்கள் பார்த்துக் கொண்டார்கள். நிலம் கிடைத்தால் அதிகாரமும் கிடைத்து விடும் அல்லவா?
விமர்சனங்கள் பல உள்ளன என்றபோதும், காலனியாதிக்கத்தால் பறையர்கள் சற்று பலனடைந்தனர் என்பது உண்மை. குறிப்பாக, கிறிஸ்தவ மிஷனரிகளின் பங்களிப்பு முக்கியமானது. அவர்கள் நோக்கம் மதமாற்றம் தான் என்றாலும் அதற்காக அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள், பறையர்களுக்குப் பலனளிப்பதாக அமைந்தன.
ராஜ்சேகர் பாசுவின் வார்த்தைகளில் இதனைப் பார்க்கலாம். ‘1850ம் ஆண்டின் தொடக்க கட்டத்தில் நடந்த மதராஸ் மிஷனரி மாநாடு,
இந்தியாவில் ஏசுவின் போதனைகளைப் பரப்புவதற்குப் பெரும் தடையாக இருப்பது சாதி தான் என்ற கருத்தை வெளிப்படுத்தியது.’
இந்த உண்மையை அவர்கள் பறையர்களிடம் கொண்டு சென்றபோது, அது அவர்களுக்குள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் மட்டுமல்ல கேரளாவிலும் இதன் தாக்கம் வெளிப்பட்டது. ‘மிஷனரிகளின் தாக்கத்தால் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய கேரள தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள், சமூகக் கட்டுப்பாடுகளை எதிர்த்தது மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் சமூக மரபாக மேல்சாதியினருக்குச் செய்துவந்த பணிவிடைகளைச் செய்ய மறுத்தார்கள்.’
மதம் மாறியவர்கள் மட்டுமல்ல, இந்து மதத்திலேயே நீடித்த தீண்டப்படாதவர்களும் கூட மிஷனரிகளின் தாக்கத்துக்கு உள்ளானார்கள். ராஜ்சேகர் பாசு எழுதுகிறார்: ‘கடுமையான எதிர்ப்புகளை மீறி, விளிம்புக்கு வெளியே தள்ளப்பட்ட மக்களின் சமூக மரியாதை, மேம்பாடு ஆகிய பிரச்னைகளில் மிஷனரிகள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டது, நாடார் போன்ற ‘கீழ்’ சாதி மக்களை ஈர்த்து, ஒரு உயர்வான சமூக நிலையை அடைவதற்கான பதிய வழிகளைப் பற்றி யோசிக்க வைத்தது.’
கடந்த, 1876- 77ம் ஆண்டுகளில் தென்னிந்தியாவில் ஏற்பட்ட பஞ்சம் கிராமப்புற ஏழைகளிடையே மிஷனரிகள் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள உதவியது. அப்போது அவர்கள் மேற்கொண்ட நிவாரணப் பணிகள் காரணமாகவும் பலர் மதம் மாறினார்கள். இன்றளவும் சர்ச்சைக்குரியதாக நீடிக்கும் மதமாற்றத்தை, விரிவான வரலாற்றுப் பின்னணியில் புரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை இந்தப்
புத்தகம் உணர்த்துகிறது.
சமூக விழிப்புணர்வு பெற்ற கையோடு பொருளாதாரம், அரசியல் ஆகிய துறைகளிலும் முன்னேறுவதற்கான வாய்ப்புகளைப் பறையர்கள் முனைப்புடன் தேடத் தொடங்கினர். இலங்கை உள்ளிட்ட பக்கத்து பிரதேங்களில் விவசாயக் கூலிகளாகவும் தொழிலாளர்களாகவும் பணிபுரிவதற்காகக் குடிபெயர்ந்தவர்கள், வீடு திரும்பியதும் தம்முடைய சேமிப்பில் இருந்து நிலம் வாங்கத் தொடங்கினர்.
கல்வியறிவு பெற்ற ஒரு தலைமுறை வளரத் தொடங்கியபோது, ‘பறையன்’ உள்ளிட்ட பத்திரிகைகளும் பறையர் மகாஜன சபா, ஆதி திராவிடர் மகாஜன சபா போன்ற அமைப்புகளும் தொடங்கப்பட்டன. காலனிய அரசிடமிருந்து சிறப்பு அதிகாரம் பெறும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. மிக முக்கியமாக, ‘பறையர்’ என்னும் அரசியல், சமூக, பண்பாட்டு அடையாளத்தை உருவாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. அதை இந்தப் புத்தகம் விரிவாகப் பேசுகிறது.
‘பிராமண, மேல்சாதி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு நமக்கான வழிபாட்டு முறைகளை வளர்த்தெடுக்க வேண்டும்’ என்னும் குரலும், ‘இந்து மதத்திலிருந்து வெளியேறவேண்டிய அவசியமில்லை, மற்ற தீண்டத்தகாதவர்களைப் போல் உள்ளே இருந்தபடியே நம் உரிமைகளை வென்றெடுக்கலாம்’ என்னும் குரலும் பறையர்கள் சமூகத்தில் வலுப்பெற்றன.
சமூக நீதிக்கான போராட்டம் பலமுனைகளில் இருந்தும் தொடங்கப்பட்டது. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற பறையர்கள் மேற்கொண்ட பிரயத்தனங்களை, நீதிக்கட்சி, பெரியார், கம்யூனிஸ்டுகள், பிராமணரல்லாதார் அரசியல் என்று விரிவாக அலசி ஆராய்கிறார் ராஜ்சேகர் பாசு.
பறையர்களின் போராட்ட மரபை விரிவான ஆதாரங்களுடன் பதிவு செய்துள்ளது ‘நந்தனின் பிள்ளைகள்’. விளிம்புநிலை மக்களின் வரலாற்றை எப்படிப் பதிவு செய்யவேண்டும் என்பதற்கு இந்தப் புத்தகம் ஓர் உதாரணம். பிற சாதியினரின் வரலாறும் கூட இதே போல் விரிவாகவும் ஆழமாகவும் ஆய்வு செய்யப்படவேண்டியது அவசியம்.
தொடர்புக்கு: marudhan@gmail.com
– மருதன்