எம்.ஜி.ஆர்., என்ற பெயர் தமிழகத்தில் எளிதில் அழிக்க முடியாத பெயராக நிற்கிறது என்பது உண்மை. கடந்த, 1953 – 72 வரை திராவிட முன்னேற்றக் கழகத்தில் எம்.ஜி.ஆர்., உறுப்பினராக இருந்தார். அந்த காலகட்டத்தில் தி.மு.க.,வின் கொள்கை களான இறையாண்மை மிக்க தமிழகம், நாத்திகம், சுயமரியாதை, மொழிப் பற்று ஆகியவற்றை தனது திரைப்படங்களில் நீர்த்துப் போன வடிவில் பரப்பினார் எம்.ஜி.ஆர்., மேலும், கட்சியின் முக்கியத் தலைவர்கள், கட்சிக் கொடியின் நிறங்கள் ஆகியவற்றை தொடர்ந்து தம் படங்களில் காட்டினார்.
தி.மு.க., அரசியல் தகவல் பரிமாற்றத்திற்கும், விளம்பரத்திற்குமான கருவியாக திரைப்படத்தைப் பார்த்தது. இதனால், எம்.ஜி.ஆரின் சினிமா பிம்பத்தை அரசியல் களத்திற்கு நகர்த்தி, ஒருவித உயிரோட்டம் மிகுந்த அரசியல் முதலீடாகப் பயன்படுத்திக் கொண்டது. அதைப் பயன்படுத்தி, அடுத்தடுத்த தேர்தல்களில் செழிப்பான வாக்கு அறுவடையைச் செய்ய தி.மு.க.,வால் முடிந்தது. இந்நிலையில், 1972ல் தி.மு.க.,விலிருந்து எம்.ஜி.ஆர்., நீக்கப்பட்டார். அந்தச் சூழலில் தமிழக மக்களிடம் தனக்கிருந்த செல்வாக்கின் நம்பிக்கையால், அ.தி.மு.க.,வைத் துவக்கினார். பின், அவசர நிலை பிரகடனத்தின் போது, 1977ல், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் மாற்றினார்.
அக்கட்சிக்கு, எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் மூலம் உருவாக்கப்பட்ட மயக்கும் மாய உலகத்தில் தங்களைத் தொலைத்த அடித்தட்டு மக்கள், 1987ல் எம்.ஜி.ஆர்., இறக்கும் வரை தங்களது ஆதரவை வழங்கினர். இந்த ஆதரவைக் கண்டு, எதிர்க்கட்சிகள் நடுங்கின. எம்.ஜி.ஆர்., இறந்த பின் அதைப் பெற பலவிதங்களில் முயன்று தோற்றன. எம்.ஜி.ஆர்., திரைப்படங்களினூடாக தனக்கு உருவாக்கிய பிம்பமும், அந்த பிம்பத்தால் ஈர்க்கப்பட்டு அதன் பிடியில்
சிக்கிய அடித்தட்டு மக்கள் குறித்தும் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் ஆய்வு செய்து, ஆங்கிலத்தில், The Image Trap என்ற நூலை, 25 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டார்.
அவரின் ஆய்வுக் காலத்தில், தமிழ் ஆய்வுச் சூழலில், விளிம்புநிலை மக்களைப் பற்றி ஆய்வுகள் – subaltern studies – இல்லாமல் இருந்தது.
விளிம்புநிலை மக்களைப் பற்றி ஆய்வை, பண்பாட்டு ஆய்வுடன் – Cultural Studies – இணைந்து எம்.ஜி.ஆரின் திரைப்படங்களையும், அதனால் அவருக்கு
உருவான ரசிகர்களையும், அதன் மூலம் அவர் முதல்வராய் தமிழகத்தை ஆட்சி செய்தது குறித்தும் மிக நுட்பமாக ஆய்வு செய்துள்ளார் பாண்டியன். அவரது சரளமான ஆங்கில நடையை, அதன் சுவாரஸ்யமும், வீரியமும் குன்றாமல் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் சரவணன்.
பரிதி