வாசிப்புக்காக நுால்கள் பல வந்த வண்ணம் இருக்க, வாழ்க்கைக்காக அவ்வப்போது இதுபோல் சில நுால்கள் வருவது வரவேற்கப்படுகிறது.
தெள்ளிய ஆங்கில நடையில் படைக்கப்பட்டுள்ள இந்நுாலில் 50 மாணவர்களின் வெற்றிக்கதைகளைக் தொகுத்தளித்து எதிர்கால இளம் பொறியாளர்கள் தம்மைத்தாமே, புதுமையாளர்களாக வடிவமைத்துக்கொள்ளத் தேவையான ஐந்து முக்கிய திறன்களை முன்வைக்கின்றனர், நுாலாசிரியர்கள் ஆர்.சுப்பிரமணி மற்றும் எஸ்.வைஜயந்தி.
ஒவ்வொரு ஆண்டும் பெரு நிறுவனங்கள் தமக்குத் தேவையான ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக மிகச் சிறந்த கல்வித்தரமுள்ள கல்லுாரி / பல்கலைக் கழகங்களின் வளாகங்களுக்கே சென்று நேர்முகமாக தேர்ந்தெடுப்பது வழக்கமாகிவிட்டது.
நேர்முகப் போட்டி யோடு பகுப்பாய்வு சோதனை, நுண்ணறிவுத் திறன் அளவீடு, பேச்சுத்திறன், குழு விவாதம், சவால்களை எதிர்கொள்ளும் திறன் ஆகிய சோதனைகளும் இருக்கும்.
அசாத்திய திறன்மிக்க மாணவர்கள் நிறுவனங்களிடம் சம்பள பேரம் செய்வதும் உண்டு. அத்தகையவர்கள், 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களே.
மற்றவர்களில் ஒரு குறைந்த சதவீதத்தினர் வேறு வழிகளில் கிடைக்கும் பணிகளில் சேர்ந்து கொள்ள, மீதமுள்ள பெரும்பான்மையோர் எதிர்காலம் யோசிக்க வேண்டியதாக உள்ளது. இவற்றின் காரணம்தான் என்ன?
பல்கலைக்கழகம் வரை ஒரு மாணவர் படிக்கும் சிறந்த கல்வியும் வெகு வேகமாக பழையதாகிவிடுகிறது. முந்தைய தலைமுறையில் இருந்து மாறுபட்டு, தொழில்நுட்ப உலகம் ஒரு புதிய பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது.
அறிவியலும், தொழில்நுட்பமும் சளைக்காமல் அதிவேகத்தில் விந்தைகள் செய்துவரும் இந்த வினோத உலகில், ஒவ்வொருவருமே காலத்திற்கேற்ப தன்னை அறிவுபூர்வமாக மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
அறிவுபூர்வமான உலகில் தன்னை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள வாழ்நாளெல்லாம், சுயமாகக் கற்க வேண்டியிருக்கிறது. ஆனால், எவ்வளவு காலம்தான் கற்றுக்கொண்டே இருப்பது?
எந்த வகையில் கற்பது? இந்த வேகமான தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்றபடி எப்படி தன்னைத் தானே தகவமைத்துக்கொள்வது? புதிய தலைமுறை பொறியியல் மாணவர்களுக்கு இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் தரும் ஒரு அரிய நூல் இது.
மென்திறன் சார்ந்த, எளிதில் புரிந்து கொள்ளத்தக்க விளக்கப்படங்கள் நுாலின் மதிப்பை உயர்த்துகின்றன.
பொறியியலில் எந்தத் துறையின் பாடம் எத்தனை ஆண்டுகளில் காலாவதியாகிவிடுகிறது என்பதும், பணியில் சேர்ந்த பின்பும் சுய கற்றல் எந்த அளவு அவசியமாகிறது என்பதும் அலசப்படுகிறது.
தொழில்முனைவோருக்கான மன நிலையை உருவாக்கிக் கொள்ளும் கலையையும் நுாலில் கற்றுப் பயனடையலாம்.
இன்றைய கல்விமுறையில் மாணவர்களுக்குக் கூடுதல் திறன்வளர்த்தல் என்பது எந்த அளவில் முக்கிய பங்கு வகிக்கவல்லது என்பதையும் உணர இந் நுால் ஒரு கருவியாக விளங்கும். புதிய தலைமுறை பொறியியல் பட்டதாரிகளுக்கான ஒரு நல்ல வழிகாட்டி நுால்.
–மெய்ஞானி பிரபாகரபாபு