நுாலாசிரியர் – கடையம் – சத்திரம் மேல்நிலைப் பள்ளியில், 32 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பின், மகாகவி பாரதியாரின் துணைவியார் செல்லம்மாள் பிறந்த ஊரான கடையத்தில் ஆசிரியர் பணியாற்றிய போது, கிடைத்த அனுபவத்தாலும், அங்கு வாழ்ந்து வரும் பல சான்றோர்களிடத்தில் செல்லம்மாளைப் பற்றிக் கேட்டு அறிந்து கொண்டும் இந்நுாலைப் படைத்துள்ளார்!
செல்லம்மாள் பாரதி (1890 – 1955) பர்த்தாவுக்கு ஏற்ற பதிவிரதை! மஹாகவியின் மஹா மனைவி! பல விசித்திரமான குண இயல்புகளைக் கொண்டிருந்த மஹா கவியைச் சரியாகப் புரிந்து, கடைசி வரையில் அவருக்கு அனுசரணையாக வாழ்ந்தவர்!
‘அவர் என்பொருட்டுப் பிறந்தவர் அல்ல, இந்த உலகுக்கு ஞானம் போதிக்க வந்தவர் ’ என்று செல்லம்மாள் பெருமையோடு கூறுவார்...
ஏறத்தாழ, 24 ஆண்டு மண வாழ்க்கை. இருந்தபோதும், சில சூழ்நிலைகள் காரணமாக, அவ்வப்போது பிரிந்திருந்தனர்.
சகோதரி நிவேதிதாவைக் கண்டதும் பாரதியார் அப்படியே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, எழுந்து நிமிர்ந்து, அவரை நோக்கினார். பின்னாளில் பாரதி தீவிர அரசியலின் போர் முரசுக் கவிதைகளைத் தீட்ட இதுவே காரணமானது!
‘நீங்கள் அரசியலில் இவ்வளவு தீவிரம் காட்ட வேண்டாம்.
உங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் யான் என்ன செய்வேன்’ என்பார் செல்லம்மாள்.
கடந்த, 1902 – 1903 இரண்டுஆண்டுகள் பாரதி – செல்லம்மாள் இல்வாழ்வு எட்டையபுரத்தில். பாரதிக்கோ நிரந்தர வருமானம் ஏதுமில்லை. 1904ல் சுதேசமித்திரன் ஏட்டில் பாரதிக்கு உதவி ஆசிரியர் பணி. சம்பளம் மாதம், 100 ரூபாய். சென்னை மயிலாப்பூர் சித்திரைக் குளம் வீதியில், ஒடுக்கமான சந்தில் பல குடித்தனங்கள் வாழ்ந்த பகுதியில் குடித்தனம். பாரதியின் தம்பி சி.விசுவநாதன் – செல்லம்மாளின் கொழுந்தன் அவர்கள் கூடவே வாழ்ந்தார் .
பாரதியின் மறைவுக்குப் பின், பாரதியின் பாடல்களைப் பதிப்புக்கும் முயற்சியில் செல்லம்மாள் இறங்கினார். பாடல்கள் நாட்டுடைமையான போது மகிழ்ந்தவர் செல்லம்மாள்.அப்போது, அவர் இறுதிக்காலம் வந்துவிட்டது.
பாரதியாரைப் பற்றி பேசும் பலரும், செல்லம்மாள் என்ற அந்த மதிப்பு மிக்க மனைவியை உணர வைக்கிறது இந்த நுால்.
– எஸ்.குரு