நுாலாசிரியர் ஆர்னிகா நாசர் நிஜமா... கற்பனையா என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு விஞ்ஞானத்துடன் கதை பேசி வடிவம் கொடுத்துள்ளார். இளமை துள்ளும் எழுத்துக்கு காதலும், அறிவியலும் கைகோர்த்து வெற்றி மகுடம் சூட்டுகின்றன. காலக்கடிகாரத்தை கொண்டு நல்லதை முடிக்கப் போகிறார் என்று நினைக்கும் போது, முடிவிலும் நிஜத்தைப் போலவே சோகத்தை தருகிறார்.
ரோபோ குழந்தையை பேச வைத்து அதிரச் செய்கிறார். பூனையும், எலியுமான டாம் அண்டு ஜெர்ரி கதை வெகு சுவாரசியம். கிளைமாக்ஸ் சரியான டச். பல்லி... கொஞ்சம் கூட எதிர்பாராத கதை... சஞ்சயா... சுந்தரமா... பரிதாபமாக பலியாகும் அறிவியல் ஆடு... கணநேரத்தில் ஒரு காதல்... அந்த காதலும் உருத்தெரியாமல் பொடி பொடியாய் உதிரும் சோகம்... என விஞ்ஞான ரேகைகள் இவரது விரல் வடிவில் எழுத்துக்களாய் உருமாறி அதிசயம் செய்கின்றன.
வானவில் போல மனசுக்கும், விரிந்து சிறகடிக்கும் கற்பனைக்கும் வண்ணம் சேர்க்கின்றன. எல்லாமுமாக சேர்ந்த, ‘ஏ’ கிளாஸ் கதை. நுாலாசிரியர் ஆர்னிகா நாசரின் கற்பனைக்கு ஒரு கைதட்டல்.
– எம்.எம்.ஜெ.,