புத்தர் ஞானம் பெற்றது, 35 வயது. அது முதல், மகா பரிநிப்பாணம் அடைந்த 80 வயது வரை, 84 ஆயிரம் போதனைகளை சீடர்களுக்கு வழங்கியுள்ளார். செவி வழியாக கடந்து வந்த இவை, பாலி மொழியில் எழுதி தொகுக்கப்பட்டுள்ளன.
இந்த போதனைகள், 19ம் நுாற்றாண்டில் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டன. தற்போது, அந்த கருத்துகள் தமிழ் மொழியிலும் வெளிவர துவங்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக, புத்தரின் போதனைகள், தீக நிகாயம் என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
முதலில் திரிபிடகம் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. தொடர்ந்து, சீல கந்த வக்கம் என்ற ஒழுக்கவியல், மகா வக்கம் என்ற பெரும் இயல், பாடிக வக்கம் என்ற வாழ்வியல் தனித்தனியாக தொகுக்கப்பட்டு உள்ளன. எளிமையாக உப தலைப்புகள் அமைத்து, கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பாலி மொழியில் உள்ள சூத்திரத்தை தமிழில் பதிப்பித்து, சிறு கதை விளக்கம் போல், சிறு உரையாடல்களுடன் எழுதப்பட்டுள்ளது. இது புரிந்து கொள்ள ஏதுவாக உள்ளது. பவுத்தம் சார்ந்த அறிவு நுால்.
– மலர்