கல்வி வாய்ப்பை இழந்து வீட்டில் முடங்கிக் கிடந்த பெண்களின் அவலம் துவங்கி, இன்றைய செழுமையான சூழலை விவரித்து, படிப்பறிவாலும், பட்டறிவாலும், விழிப்புணர்வும் நன்மதிப்பும் எய்தி வருவதை விளக்கிச் சொல்லும் நுால்.
கடந்த நுாற்றாண்டுகளில் பெரும்பான்மைப் பெண்கள், ஆண்களைச் சார்ந்து இல்லற இயந்திரமாகவும், போகப் பொருளாகவும் உழன்ற நிலைமை மாறி, உயர்ந்த வேலைவாய்ப்புகளால் செல்வாக்கு, எழுச்சி, முன்னேற்றம், தன் மதிப்பு உயர்ந்து வருவதைச் சுட்டிக்காட்டி, கல்வி வளர்ச்சியே பெண்களின் நிலையை புதிய தளத்துக்கு உயர்த்தி இருப்பதை முன்வைக்கிறது.
கிராமப்புறப் பள்ளிகளில் போதிய கழிப்பறை வசதி இல்லாமையால் பெண்களின் படிப்பு நிறுத்தப்படுவது பற்றியும் பேசப்பட்டுள்ளது. இனக் கவர்ச்சி பற்றிய தெளிவை உருவாக்கி வழி நடத்த வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகிறது.
குழந்தைத் திருமணம், போதிய கல்வியறிவு இன்மை போன்றவற்றால் பெண்களின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படுவதைக் கூறி, சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இளம்பெண்களின் விழிப்புணர்வில் ஏற்பட்டுள்ள மாற்றம் விவரிக்கப்பட்டுள்ளது. தலைப்புக்கேற்ப எந்தெந்த வகையில் மாற்றம் என்பதை விரிவாக விவாதிக்காமல், அறிவில் சிறந்து வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்ப்பர் என, பொதுமையான கருத்தோடு முடிகிறது.
– மெய்ஞானி பிரபாகரபாபு