அண்டை நாடான இலங்கையில், கிறிஸ்துவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் மீது, ஐ.எஸ்., என்ற பயங்கரவாத அமைப்பு, ஈஸ்டர் தினத்தில் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடந்தது முதல், தொடர்ந்து மூன்று மாதங்களில் விசாரணை என்ற பெயரில் கிடைத்த அனுபவம், விமர்சனப் பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
வன்முறை நிகழ்வை தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் நடந்த சந்திப்புகள், அதிகார விசாரணை, அண்டை வீட்டு மிரட்டல், அது தொடர்பாக நடக்கும் உரையாடல், அதன் மூலம் ஏற்பட்ட நெருக்கடி என, வலியின் அடுக்குகள் அனுபவமாகியுள்ளன.
நாட்குறிப்பு மற்றும் உரையாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளது இந்த நுால். விமர்சனங்களுடன் நியாயமான கேள்விகளையும் எழுப்புகிறது. வாழ்தலை உறுதிப்படுத்த முயல்கிறது. நெருக்கடிகளை தீர்க்கும் விடைகளின்றி, வலிகளை உள்வாங்குகிறது.
ஏழை நாடுகளில் மக்கள் படும் அவஸ்தையை வெளிப்படுத்துகிறது இந்த புத்தகம். இல்லாத ஒன்றை இருப்பதற்கான சாத்தியமாக தொடர்புபடுத்த முயல்வதை படம் பிடிக்கிறது. அதில் எழும் இம்சை முழுதும் இயல்பாக விரவிக் கிடக்கிறது. விடைகளற்ற கேள்விகள் விசாரணை என்ற பெயரில் நிரம்பியிருப்பதை காண முடிகிறது.
பெண்களின் மன வலியும் முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் உள்ள எளிய நடையோட்டம், வாசிப்பை உறுதி செய்கிறது. இலக்கிய நயத்துடன் மிளிர்கிறது. அடுக்கடுக்கான வலிகளை சுமந்துள்ள ஆவண நுால்.
– மலர்