அல்லாவின் திருத்துாதராகப் போற்றப்படும் நபிகள், அறநெறிகள் சார்ந்து சினந்து கண்டித்த தருணங்களை எடுத்துக்காட்டும் வகையில் எழுதப்பட்டு உள்ள நுால். விளக்கங்களும், அறக்கருத்துகளும் விரவிக் கிடக்கின்றன.
ஏழ்மையைக் கண்டபோது, பெண்களை தாக்கிய போது, மூத்தோரைப் பழித்தபோது, குற்றம் செய்தவருக்காக பரிந்த போது, பொய் கூறியபோது, அதிகாரி கையூட்டு கேட்டபோது, தீமைகளைத் தடுக்காதபோது, உயிரினங்களை வதைக்கும் போது... அறச்சீற்றம் கொண்டதை விவரித்துள்ளது.
இந்த தருணங்களில் நபிகள் கொண்ட சினத்திற்குச் சீரான விளக்கங்கள், 30 நீதி நெறிக் கட்டுரைகளில் வழங்கப்பட்டுள்ளன. வறுமை மிகுந்த இடத்தில் ஆன்மிகம் வீழ்ந்து, இறை நிராகரிப்பு ஏற்படும்; தொழுகையால் மன, சமூக மாற்றம் ஏற்பட வேண்டும். அளவான தர்மங்கள் செய்ய வேண்டும். மன்னிக்கும் மனப்பான்மையை பெருக்க வேண்டும். அறிவு கொண்டோரை மதித்தல் வேண்டும் போன்ற அரிய கருத்துக்கள் காணக்கிடைக்கின்றன. நபிகளின் மேன்மை குணத்தை அறிய உதவும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு