தமிழகத்தில் கிறிஸ்தவ சமயம் பரவியபோது விழுந்த தடயங்களை, கள ஆய்வு செய்து வெளிப்படுத்தும் வகையில் வரலாற்று பின்னணியுடன் அமைந்துள்ள நுால். இரண்டு பாகங்களாக அமைந்து உள்ளது. வட்டாரங்களில் நிலவும் பேச்சு மொழியை உள்வாங்கி, கருத்துகளில் தெளிவு பெற்று பகுதி வாரியாக மக்கள் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
கிறிஸ்தவ சமயம் தமிழகத்துக்கு எப்போது வந்தது என்ற கேள்வியுடன் தேடலைத் துவங்குகிறது இந்த நுால். முக்கிய ஆவணங்கள், கள ஆய்வுகள், நேரடி பேட்டிகள் மூலம் சேகரித்த தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. எளிமைாக வாசித்து புரிந்து கொள்ளும் வகையில் சுவாரசிய நடையில் உள்ளது. புராதன கட்டடங்கள், அவற்றின் வரலாற்று தடயங்கள், அவை கூறும் செய்திகள், கல்வெட்டு ஆதாரங்கள், பண்பாடுகள் என சான்றுகளை அலசி படிப்படியாக சொல்கிறது. வித்தியாசமான கூறுகளுடன் இந்த சமயம், தமிழகத்தில் வியாபித்திருப்பதை கள ஆய்வுகள் நிரூபிக்கிறது. தொண்டு உள்ளத்தோடு நடந்த செயல்பாடுகளும் வெளிப்பட்டுள்ளன. எளிய மொழி நடையில் அமைந்த வரலாற்று நுால்.
– மலர்