பொதுவாகவே பலருக்கு நல்ல விஷயங்களை நேரடியாகச் சொன்னால் பிடிக்காது. கசப்பான மருந்தை தேன் தடவியோ, காப்ஸ்யூலில் அடைத்தோ தருவதைப் போன்று, பல நல்ல கருத்துகளை குட்டிக் கதைகள் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார், இந்த நுாலின் ஆசிரியர் பிரபுசங்கர்.
அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத் தரித்ததைப் போன்று, இந்த நுாலில் உள்ள இரு பக்க கதைகளில் ஏராளமான வாழ்க்கைத் தத்துவங்களை அள்ளித் தெளித்திருக்கிறார். நுாலின் தலைப்பு, ‘இளையோரே இனியவை கேளீர்’ என்றிருந்தாலும், அனைத்து வயதினரும் தெரிந்து கொள்ள வேண்டிய பல நல்ல விஷயங்கள் இதில் அடங்கி உள்ளன.
தற்காலத்தில் சமுதாயத்தில் குறிப்பாக இளைஞர்களிடம் நிலவும் ஒழுக்கம் குறைந்த, குறிக்கோளற்ற போக்கை மாற்ற இந்த நுால் பெரிதும் உதவும். இன்னும் சொல்லப்போனால், தற்காலக் கல்வி முறையில் ஒழுக்க நெறி வகுப்பு (MORAL INSTRUCTION) இல்லாத வெற்றிடத்தை இந்த நுால் நிரப்ப முடியும் என்றால் மிகையாகாது.
– இளங்கோவன்