அன்றாட நிகழ்வுகள், நேரில் பார்த்த சம்பவங்களை மனதில் கொண்டு கற்பனை கலந்து எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். கவிஞருக்கு நடந்த பாராட்டு விழா அவலத்தை நுாதனமாக விளக்குகிறது ஒரு கதை. கோவில் பொருட்களை வைத்தே, ‘கடவுள் இல்லை’ என கோவில் சுவரில் எழுதுவதை மையமாகக் கொண்டுள்ளது ஒரு கதை.
நடிகையின் கணவன், அவள் நடித்த படத்தைப் பார்த்ததும் புலம்புவது போல் ஒரு கதை மிக சுவாரசியமாக உள்ளது. முதிர் கன்னி யான மகள் மனதை நோகடிக்க விரும்பாத தந்தையின் பரிவு, பதவி உயர்வு கிடைக்காததால் வேலையை துறந்து, பெட்டிக் கடை வைத்தவர் போன்ற வித்தியாச கரு மற்றும் கதாபாத்திரங்களைக் கொண்டு அமைந்துள்ள கதைகள், வாழ்க்கை அனுபவத்தை காட்டி ஆர்வமூட்டுகின்றன.
காலத்துக்கு ஏற்ப அமையும் மனோ நிலையை ஒட்டி ஆழ்ந்து எழுதப்பட்டுள்ளன. படிப்பவருக்கு உண்மைகளையும், புதிய அனுபவங்களையும் தரும் நுால்.
– இளங்கோவன்